உத்தமபாளையம்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சை பழங்களில் ஏற்படும் வெடிப்புகளை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து திராட்சை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
திராட்சை விவசாயம்
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, தென்னை விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் திராட்சை விவசாயம் நடைபெற்று வருகிறது. திராட்சை விவசாயத்தில் புதிய ரகம் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ரக திராட்சைகளை விவசாயம் செய்யவும், விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தவும் ஆனைமலையன்பட்டியில் திராட்சை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது.
பல்வேறு ரக திராட்சையை பயிர்செய்ய முதல் கட்டமாக வேர் செடிகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திராட்சை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் பார்த்திபன், உதவி பேராசிரியர் சுப்பையா ஆகியோர் கூறியதாவது:–
திராட்சையில் வெடிப்பு
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சை பழத்தில் ஏற்படும் வெடிப்புகளை கட்டுப்படுத்த கால்சியம் நைட்ரேட் அல்லது கால்சியம் குளோரைடு கலவையை 1 லிட்டர் தண்ணீரில் 10 கிராம் என்ற அளவில் கலந்து திராட்சை பட்டாணி அளவில் இருக்கும் போது ஒருமுறையும், திராட்சை நிறம் மாறும் தருணத்தில் ஒரு முறையும் அதன் பின்பு 15 நாட்கள் கழித்து மற்றொரு முறையும் தெளித்தால் பழங்களின் தோல் கெட்டியாகி பழம் வெடிப்பது குறைந்து விடும்.
விவசாயிகளுக்கு எந்தவித சந்தேகங்களுக்கும் விரிவாக பதில் அளிக்க ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானிகள் தயாராக இருப்பார்கள். திராட்சை விவசாயத்தை பொறுத்தவரை அதிக அளவில் லாபம் ஈட்ட ஏற்றுமதி தரம் வாய்ந்த திராட்சை ரகங்களை பயிர் செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். மேலும் விபரம் பெற திராட்சை ஆராய்ச்சி நிலையத்திற்கு விவசாயிகள் நேரடியாக வந்து சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று செல்லலாம்.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment