Thursday, November 19, 2015

நெற்பயிர்களை நோய் தாக்கும் அபாயம்: கட்டுப்படுத்துவது எப்படி?


திருச்சி, :  தமிழகம் முழுவதும் தற்போது பெய்த மழையினால் நெற்பயிர்களை நோய் தாக்கும் அபாயம் உள்ளது. அதனை எப்படி கட்டுபடுத்துவது குறித்து வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது பெய்த மழையினால், திருச்சி மாவட்டத்தில் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படும் சன்னரக நெல் ரகங்களான பிடி 5204 மற்றும் வெள்ளை பொன்னியில் இலை கருகல் நோய் அதிக அளவில் தாக்க கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நோய் பெரும்பாலும் கதிர் வெளிவரும் நேரத்தில் அதிகமாக தென்படும். ஆனால், சாதகமான தட்பவெப்ப நிலையில் இளம் பயிரையும் தாக்கும். நோய் தாக்கிய இளம் பயிர் நடவு செய்த 2 வாரங்களில் வாடி இறந்து விடும். பாக்டீரியா மூலம் தாக்கப்படும் இந்நோயானது பயிரின் இலைகளில் காற்றினால் ஏற்படும் இலை காயங்கள் மூலமாக பயிர் முழுவதும் ஊடுறுவி பரவக்கூடியதாகும். இலையின் ஓரப்பகுதிகள் நுனியில் இருந்து கீழ்நோக்கி பழுப்பு அல்லது மஞ்சள் நிறமாக மாறி பின்னர் இலையின் ஓரங்கள் வைக்கோல் நிறமாக மாறி காயும். காய்ந்த பாகத்தின் உட்பகுதி அலைகள் போன்று வளைந்து காணப்படும். 


சில நேரங்களில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக்கோடுகள் இலையின் நடுபாகத்தில் நடுநரம்புக்கு இணையாக இருபுறமும் தோன்றும். நாளடைவில் இந்த கோடுகள் விரிவடைந்து இலையின் பெரும் பகுதி பாதிக்கப்படும். நோயின் தீவிரம் அதிகமாகும் போது இலைகள் முழுவதும் கருகி சருகாக பயிர் காய்ந்து விடும். இலை நோயை கட்டுப்படுத்துவது எப்படி? என திருச்சி வேளாண் துறை இணை இயக்குனர் சந்திரசேகரன் தெரிவித்திருப்பதாவது: பனி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 26 டிகிரி செல்சியஸ் போன்றவை நோய் வேகமாக பரவ உகந்த சூழ்நிலையாகும். மேலுரத்தில் தழைசத்து மிகுதியாகவும், சாம்பல் சத்து உரங்களை குறைவாக இடும்பொழுது நோயின் வீரியம் அதிகரிக்கும். எனவே நெற் பயிருக்கு பரிந்துரை செய்யப்பட்ட தழைசத் தினை மட்டும் பயிரின் வளர்ச்சி நிலைகளில் 3 முறையாக பிரித்து இட வேண்டும். ஒவ்வொரு முறையும் தழைசத்து உரமான யூரியாவுடன் 5 பங்கிற்கு ஒரு பங்கு வேப்பம் புண்ணாக்கு, பரிந்துரை செய்யப்படும் பொட்டாஷ் உரத்தையும் கலந்து இட வேண்டும். நோயினால் தாக்கப்பட்ட பயிரை அறுவடை செய்த பின்னர் மிஞ்சியிருக்கும் தூர் கட்டை மற்றும் இதர பகுதிகளை அழித்துவிட வேண்டும். நோய் தாக்கிய வயலில் அதிகமாக நீர் தேக்கி வைக்க கூடாது. மழைக்கு பின்னர் வயலில் தேங்கும் அதிகப்படியான நீரை வடித்து விட வேண்டும். நோய் தாக்கிய பசுஞ்சாணக் கரைசல் தயார் செய்து தெளிக்கலாம்.

 இக்கரைசலை தயார் செய்ய ஒரு லிட்டர் நீரில் 20 கிராம் பசுமாட்டு சாணத்தை கரைத்து வட்டிகட்டி பின்னர் தெளிக்க வேண்டும். இக்கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் 2ம் முறையாக தெளிக்க வேண்டும். நோய் தாக்குதல் அதிகமாக தென்பட்டால் ஏக்கருக்கு 18 கிராம் ஸ்டிரெப்டோசைக்கிளின் அல்லது 120 கிராம் ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் டெட்ரோ சைக்கிளின் ஹைட்ரோகுளோரைடு கலந்த கலவையுடன் 500 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு 200 லி. நீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை இக்கரைசலை தெளித்து பாக்டீரியல் இலை கருகல் நோயை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=508815&cat=504


No comments:

Post a Comment