விருதுநகர்:மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் நம்பிக்கையுடன் விவசாயப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.வானம் பார்த்த பூமியானவிருது நகர்மாவட்டம் முற்றிலும் விவசாயத்தை நம்பியே உள்ளது. மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 801.22 மி.மீ., ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை சரிவார பெய்யாமல் கண்ணாமூச்சி காட்டிவருவதால் நகைகளை வங்கியில் அடமானம் வைத்து கடன்பெற்று பயிர்செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அணைகள்
2012ல் சராசரியைவிட மிக்குறைவாக அதாவது 563.62 மி.மீ., மட்டுமே பெய்ததால் கடும் வறட்சி ஏற்பட்டது.தற்போதைய மழையால் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான பிளவக்கல் பெரியாறு அணை முழு உயரமான 48 அடியில் 44 அடியை எட்டிஉள்ளது. ராஜபாளையம் அருகே சேத்தூர் சாஸ்தாகோயில் அணை நிறைந்து விட்டது.
புஞ்சை விவசாயம்
மாவட்டத்தின் மேற்குப்பகுதிகளான தேவதானம், சேத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் நஞ்சை, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, விருதுநகர், சிவகாசி உட்பட கிழக்கு பகுதிகளில் புஞ்சை விவசாயம் நடக்கிறது. இதில் கிழக்குப்பகுதியில் அனைத்தும் வானம் பார்த்த நிலங்களாக உள்ளதால் மழை பெய்யும் காலங்களில் மட்டுமே விவசாயம் நடைபெறும். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அதை நம்பி கிழக்குப்பகுதி விவசாயிகளும் விவசாயத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நெல் விவசாயம்
மேற்குபகுதியில் நஞ்சை பயிர்களான நெல், வாழை, கரும்பு, தென்னை போன்ற விவசாயம் நடைபெறுகிறது.
இங்கு தற்போது மழை பெய்வது நெல்நடவுக்கு ஏற்ற காலமாக உள்ளதால் நெல் விவசாயிகள் உழவு, நடவு உள்ளிட்ட விவசாயப்பணிகளில் விவசாயிகள் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். மாவட்டத்தில் பருவமழை அவ்வப்போது பெய்து வந்தாலும் நெல் விவசாயத்திற்கு இது போதுமானதாக இல்லை. நாற்றுகள் வாடாமல் இருக்க உதவியாக உள்ளது.
இரண்டு பருவங்கள்
விவசாய பயிர்சாகுபடியில் அக்., 1 முதல் மார்ச் 31 வரை வடகிழக்கு பருவமழை காலத்தையொட்டி "ராபி' பருவம், ஏப்.,1 முதல் செப்.,30 வரை தென்மேற்கு பருவமழை காலத்தையொட்டி காரிப் பருவம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வடகிழக்கு பருவமழைதான் விவசாயத்திற்கு பெருமளவு கைகொடுக்கும். மாவட்டத்தின் மொத்த விவசாய பரப்பு 1,14,172.348
எக்டேர். இரண்டு பருவங்களிலும் பயிர் சாகுபடி செய்தால் இதன் பரப்பு அதிகரிக்கும்.
அதிக சாகுபடிக்கு வாய்ப்பு
மாவட்டத்தில் கடந்தமாதம் வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழை பெய்தநிலையில் வடகிழக்கு பருவமழையும் கடந்த சிலநாட்களுக்கு முன் துவங்கி தொடர்ந்து பெய்து வருவதால்
இந்தாண்டு சாகுபடி அதிகமாக இருக்கும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
54,000 எக்டேரில் சாகுபடி
மாவட்டத்தில் ஏப்ரல் முதல் அக்.,30 வரை 7,000 எக்டேரில் நெல், 27,000 எக்டேரில் சிறுதானியம், தலா 7,000 எக்டேரில் பயறுவகைகள் ,பருத்தி, எண்ணெய் வித்துக்கள் என 54,000 எக்டேர் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
1,15,860 எக்டேர் இலக்கு
மாவட்டத்தில் இந்தாண்டு 31,000 எக்டேரில் நெல், 51,800 எக்டேரில் சிறுதானியங்கள், 12,220 எக்டேரில் பயறு வகைகள், 10,000 எக்டேரில் பருத்தி, 3,000 எக்டேரில் கரும்பு, 7,840 எக்டேரில் எண்ணெய் வித்துக்கள் என 1,15,860 எக்டேர் பயிர் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இயற்கையின் வரப்பிரசாதம்
விஜயமுருகன்(தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்): கடந்த சில ஆண்டுகளாக ஏமாற்றிய வடகிழக்கு பருவமழை இந்தாண்டு சரியான நேரத்தில் துவங்கி உள்ளது. இயற்கையின் வரப்பிரசாதமான அதை மகிழ்வோடு வரவேற்கிறோம். விவசாயிகளுக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து, உபகரணங்கள் உள்ளிட்டவற்றையும், மானியங்களையும் அரசு, மாவட்ட நிர்வாகம் முழு அளவில் வழங்க வேண்டும். இதன் மூலம் நம்பிக்கையுடன் பயிர்சாகுபடி செய்து அதன் பரப்பு நிச்சயம் அதிகரிக்கும் என நம்புகிறோம்.
தாமதமானாலும் நல்லதே
முருகேசன்(தமிழக விவசாயிகள் சங்க ராஜபாளையம் நகர் செயலாளர்):ராஜபாளையத்தில் உள்ள கண்மாய்கள் பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையை நம்பி உள்ளன. கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் மக்காச்சோளம், கரும்பு, பயறு வகை பயிரிட்டவர்கள் சிரமப்பட்டனர். குறைந்த உற்பத்தியை கரும்பு விவசாயிகளுக்கு கிடைத்தது. இதனால் பலர் நஷ்டத்தை சந்தித்தனர்.
தற்போதைய மழை தாமதமாக பெய்தாலும் மக்காச்சோளம், கரும்பு, தென்னை, பயறு வகை பயிரிட்டவர்களுக்கு நல்லது. தொடர் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் நெல் நடவு பணி நடந்து வருகின்றனர். தற்போதைய மழையால் கண்மாய்களில் முழு அளவில் தண்ணீர் தேங்கவில்லை. தொடர்ந்து மழை பெய்தால் தான் கண்மாய் நிரம்பும், கடைமடை வரை தண்ணீர் செல்ல உதவும் .
மழைநீர் எட்டிப்பார்க்காத
கண்மாய்கள்
மாவட்டத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் 290, ஒன்றிய பராமரிப்பில் 708 என 998 கண்மாய்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை மழைநீர் எட்டிக்கூட பார்க்கவில்லை. வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, சேதமே இதற்கு காரணம்.
இதனால் பாசன விவசாயிகளுக்கு பாதிப்புதான். 35,193 கிணறுகளும் விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றிலும் தண்ணீர் மட்டம் பெருமளவு குறைந்து விட்டது.
அதனால் முழுக்க முழுக்க மழையை நம்பி மட்டுமே விவாசயம் உள்ளது.
அணைகளை திறக்கலாம்
பிரகலாதன் (விவசாயி, வத்திராயிருப்பு): கடந்த ஆண்டில் கோடைமழை நன்கு பெய்ததால் கண்மாய்களில் இருந்த நீரை வைத்து விவசாயம் செய்தோம். தற்போது கண்மாய்கள் காலியாக உள்ளன.
கிணறுகளிலும் நீர்ஊற்று கிடைக்கவில்லை. நீர்மட்டம் அதல பாதாளத்தில் உள்ளது. மழைநீரை நம்பி நெல் நடவு செய்துள்ளோம். மழையும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைவாகத்தான் பெய்துள்ளது.
இந்த மழை நேரத்தில் பிளவக்கல் அணைகளை திறந்துவிட்டால் பயிர்கள் உயிர்பெறும். நீரும் சேதாரமின்றி கண்மாய்களுக்கு சென்று சேரும்,' என்றார்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1378832
No comments:
Post a Comment