Monday, November 2, 2015

இன்றும், நாளையும் மழை கொட்டுமாம்!


சென்னை:'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாவட்ட கலெக்டர்கள் உஷாராக இருக்கும்படியும் அரசு உத்தரவிட்டுள்ளது. 
வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால், சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பரவலாக மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகை, தேனி மற்றும் டெல்டா மாவட்டங்கள் என, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், நேற்று கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று விட்டு விட்டு மழை பெய்தது; சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

'தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும். சென்னையிலும் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் சிவகங்கையில் அதிகபட்சமாக, 7 செ.மீ., மழை பெய்துள்ளது.

கலெக்டர்கள் உஷார்:மழைக்காலத்தை ஒட்டி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க, வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், அந்தத் துறையின் அமைச்சர் உதயகுமார் தலைமையில், சென்னை எழிலகத்தில் நேற்று நடந்தது.

அப்போது, மழை தீவிரமடைவதால், கலெக்டர்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும்; வருவாய் நிர்வாக ஆணையர், மாவட்ட கலெக்டர்களுடன் தொடர்பில் இருந்து, மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.

நிவாரணம் உயர்வு:இதற்கிடையில், மழையால் ஏற்படும் உயிர் இழப்புக்கான நிவாரண தொகையை, 2.50 லட்சம் ரூபாயில் இருந்து, 4 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்திஉள்ளது.
அதேபோல, மாடுகள் இறப்புக்கான நிவாரண தொகை, 30 ஆயிரமாகவும், ஆடுகள் இறப்புக்கான நிவாரணம், 3,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. முழுதும் சேதமடைந்த வீடுகளுக்கு, 5,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு, 2,500 ரூபாயும் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு
உள்ளது.

398 வீடுகள் சேதம்:சென்னையில் நேற்று நடந்த வருவாய் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திற்குப் பின், வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஷ்ரா கூறியதாவது:வடகிழக்கு பருவ மழையால், இதுவரை, 398 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில், 88 வீடுகள் முழுமையாகவும், 310 வீடுகள் பாதியளவும் சேதமடைந்துள்ளன; 88 ஆடு, மாடுகள் இறந்துள்ளன. இதற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். மழைக்கால பாதிப்பை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள், சமூக நலக்கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


http://www.dinamalar.com/news_detail.asp?id=1377797

No comments:

Post a Comment