Friday, October 30, 2015

தூத்துக்குடி மீன்வள கல்லூரியில் மீன் கழிவில் இருந்து உரம் தயாரிக்கும் பயிற்சி


தூத்துக்குடி,
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் அங்கமான மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பயிற்சி நடந்தது. இந்த பயிற்சி 3 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் .சீனிவாசன் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி வரவேற்றார்.
பயிற்சியில், மீன் பதன தொழில்நுட்ப துறை பேராசிரியர் வேலாயுதம், மீன் கழிவுகளை மறுசுழற்றி செய்து, உரமாக மாற்றும் முறை பற்றி பேசினார். கல்லூரி முதல்வர் சீனிவாசன், மீன் கழிவுகளை மறுசுழற்றி செய்வதன் முக்கியத்துவத்தையும், நல்ல உரம் தயார் செய்து, தோட்டப்பயிர்களுக்கும் மீன்வளர்ப்புக்கு பயன்படுத்துவது பற்றி பேசினார்.
இந்த பயிற்சியில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 27 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியாளர்களுக்கு மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பதற்கான பயிற்சி கையேடும் வழங்கப்பட்டது. முடிவில் உதவி பேராசிரியர் சா.ஆனந்த் நன்றி கூறினார்.

நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள் : வேளாண் அதிகாரி விளக்கம்



வாடிப்பட்டி வேளாண்மை கோட்டம் வேளாண்மை உதவி இயக்குநர் .ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
 வாடிப்பட்டி வேளாண்மை கோட்டத்தில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் தற்போது நிலவிவரும் தட்ப வெப்ப நிலையில் நெற்பயிரில் புகையான் தாக்கிட வாய்ப்பு உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பின்வரும் முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
  அதாவது, பயிருக்கு அதிக அளவில் யூரியா இடுவதை தவிர்க்க வேண்டும். பூச்சிமருந்து அடிக்கும் முன்பு வயலில் தேங்கியுள்ள தண்ணீரை வடித்து விட வேண்டும். வேம்பு எண்ணெய் 3 சதவிகிதம் ஹெக்டேருக்கு 15 லிட்டர் மற்றும் பாஸலோன் 35 இசி 1500 மில்லி லிட்டர் ஹெக்டேருக்கு தெளிக்க வேண்டும். அல்லது அஸிபேட் 75 சதவிகிதம் எஸ்பி 666- 1000 கிராம் ஹெக்டேருக்கு அல்லது இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல். 100. 125 மில்லி லிட்டர் ஹெக்டேருக்கு தெளிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
 மேலும் விவசாயிகள் தங்களது வயல்களில் புகையான் தாக்குதல் காணப்பட்டால் உடனடியாக வாடிப்பட்டி வேளாண் அலுவலர்களை அணுகிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


ரூ.110-க்கு துவரம் பருப்பு: மதுரையில் 11 இடங்களில் நாளை முதல் கிடைக்கும்



மதுரையில் ரூ.110-க்கு துவரம் பருப்பு விற்பனை ஞாயிற்றுக்கிழமை (நவ.1) தொடங்க உள்ளதையடுத்து, அதைக் கண்காணிக்க சிறப்புக் குழுவை கூட்டுறவுத் துறை அமைத்துள்ளது.
 தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.110-க்கு விற்பனை செய்யும் திட்டம் கூட்டுறவுத் துறை மூலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்படுகிறது.
மதுரையில் திருமலை நாயக்கர் மகால் பகுதி, திருநகர், அழகப்பன் நகர் ஆகிய இடங்களில் உள்ள பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை சிறப்பு அங்காடி, பொன்னகரம் மதுரா கோட்ஸ் பண்டகசாலை சிறப்பு அங்காடி, பழங்காநத்தம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர் பண்டகசாலை சிறப்பு அங்காடி, ரேஸ்கோர்ஸ் பகுதி பண்டகசாலை சிறப்பு அங்காடி, அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை பண்டகசாலை, டிவிஎஸ் பண்டகசாலை, திருமங்கலம் கூட்டுறவு பண்டகசாலை ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.
 இதற்கான துவரம் பருப்பு சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு, தற்போது அரைக் கிலோ பாக்கெட்டுகளாகத் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரைக் கிலோ பாக்கெட் ரூ.55-க்கு கிடைக்கும்.
 இந்த விற்பனையைக் கண்காணிக்க கூட்டுறவுத் துறை பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர், சார்பதிவாளர்கள் கொண்ட 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் தற்போது பாக்கெட் தயாரிக்கும் பணியில் இருந்தே கண்காணிப்பைத் தொடங்கியுள்ளனர்.



செஞ்சேரியில் கொப்பரை கொள்முதல் மையம் தொடக்கம்



பல்லடம் அருகே செஞ்சேரி கூட்டுறவு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை கொள்முதல் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். கூட்டுறவு வங்கித் தலைவர்கள் வதம்பச்சேரி பி.கந்தசாமி, சூலூர் லிங்கசாமி, பாபு என்ற ஜெயசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொப்பரை கொள்முதல் மையத்தை கோவை மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.கனகராஜ் தொடக்கி வைத்துப் பேசினார்.
இதில், டெல்லி இப்கோ அறக்கட்டளை உறுப்பினர் .வி.ஆர்.ராமசந்திரன், ஒன்றியக் கவுன்சிலர் திருமலைசாமி, வட்டார அட்மா தலைவர் எஸ்.பி.ராமசாமி, தென்னை விவசாயி மோகன்மந்தராசலம், கூட்டுறவுச் சங்க மேலாண்மை இயக்குநர் திருமாவளவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
4 விவசாயிகள் 190 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரக் கொப்பரை ரூ. 71.50-க்கும், இரண்டாம் தரக் கொப்பரை ரூ. 70.50-க்கும், மூன்றாம் தரக் கொப்பரை ரூ. 70-க்கும் விற்பனையானது.
 மொத்தம், ரூ. 6 லட்சத்து 78 ஆயிரத்து 300-க்கு ஏலம் மூலமாக விற்பனையானது. வெளி மார்க்கெட் விலையை விட கூடுதல் விலைக்கு கொப்பரை விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் மக்களின் நுகர்வு குறைந்து விற்பனை பாதிப்படையவதால் கொப்பரைக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. கலப்படத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.கனகராஜிடம் விவசாயிகள் கூறினர்.
இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என ஊராட்சித் தலைவர் கூறினார்.
 

குறைந்த விலை துவரம் பருப்பு நாளை முதல் விற்பனை

 

குறைந்த விலை துவரம் பருப்பு விற்பனை செய்யும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) தொடங்குகிறது. சென்னையில் 48 கடைகள் உள்பட மாநிலத்தில் 91 அங்காடிகளில் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது.
 
மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த 5 ஆயிரம் டன் துவரையில், 500 டன்னை தமிழக அரசு பெற்றுள்ளது. 
 9
ஆலைகளில் பருப்பை உடைக்கும் பணி: இறக்குமதி செய்யப்பட்ட முழு துவரையானது, பருப்பாக மாற்ற ஆறு நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது. இதை சென்னையில் 9 தனியார் ஆலைகளில் பருப்பாக உடைக்கும் பணிகள் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகின்றன. தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு ஆலையில் மட்டும் சுமார் ஏழு டன் அளவுக்கு மாற்றப்படுகிறது. 
 
இந்த ஆலைகள் 24 மணி நேரமும் இயங்குவதால், 500 டன் துவரையில் பாதிக்கும் மேற்பட்டவை பருப்பாக மாற்றப்பட்டுள்ளன. பின்னர் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்டுகளாக பருப்புகள் போடப்பட்டு வருகின்றன. 
 
குறைந்த விலையில் நாளை முதல் விற்பனை: இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி, குறைந்த விலையிலான துவரம் பருப்புத் திட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
 
இது குறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
 
சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் 91 அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக 500 டன் துவரையானது, இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், 350 டன் துவரையானது, கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான கடைகளுக்கும், மீதமுள்ள 150 டன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான அங்காடிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
 91
கடைகளில் விற்பனை: சென்னையில் திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் (டி.யு.சி.எஸ்.,) சொந்தமான 12 கடைகளிலும், 36 கூட்டுறவுக் கடைகளிலும் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படும்.
 
இதுதவிர, மாநிலத்தில் மற்ற இடங்களில் 43 கூட்டுறவுக் கடைகள், நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான கடைகளிலும் விற்ட்னை செய்யப்படும்.
 
அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்டுகள்
 
துவரம் பருப்பு விற்பனைக் கடைகள் அனைத்தும் காலை 10 முதல் இரவு 8 வரை செயல்படும். பிற்பகல் 1 முதல் 2.30 வரை உணவு இடைவேளைக்காக மூடப்பட்டிருக்கும்.
 
அரை கிலோ ரூ.55-க்கும், ஒரு கிலோவை ரூ.110-க்கும் பெறலாம்.
 
கடைகளுக்கு பாக்கெட்டுகள் எண்ணிக்கை இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எந்த பாக்கெட்டுகளை அதிகளவு விரும்பி வாங்குகிறார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மக்களின் தேவை திட்டம் தொடங்கிய ஓரிரு நாள்களில் தெரிந்து விடும் என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 





http://www.dinamani.com/tamilnadu/2015/10/31/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86/article3105947.ece