Friday, July 1, 2016

சூரியகாந்தியில் பச்சைக் காய்ப் புழுவை கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை

சூரியகாந்தியில் பச்சைக் காய் புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் இணை இயக்குநர் அ. அல்தாப் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், தாந்தோணி, தரகம்பட்டி ஆகிய வட்டாரங்களில் சூரியகாந்தி பயிர் பயிரிடப்பட்டு வருகிறது. சூரியகாந்தி பயிரிட்டு 20 முதல் 30 நாட்கள் ஆன நிலையில் பச்சை காய்ப்புழு (ஹெலிகோவெர்பா) தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. இப்புழுவானது சூரியகாந்தி இலையை சுரண்டி சாப்பிடுவதால் இலையின் வளர்ச்சி பாதிக்கிறது. எனவே ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையைப் பின்பற்றி இந்தப் புழுவை கட்டுப்படுத்தலாம்.  ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் பெரிய புழுக்களை கையில் எடுத்து அழித்திட வேண்டும். மேலும் சூரியகாந்தியில் ஊடுபயிராக பச்சைப்பயறு, உளுந்து, கடலை போன்றவை பயிரிட்டும், சூரியகாந்தி வயலை சுற்றிலும் வரப்புகளில் பொறிப்பயிரான செண்டுமல்லி செடியை விதைப்பதன் மூலமும் பச்சைக் காய்ப் புழுவை அழிக்கலாம்.மேலும் விளக்குப்பொறி ஒரு ஏக்கருக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் வைத்தும், 5 சதவீதம் வேப்ப எண்ணெய் (அல்லது) 5 சதவீதம் வேப்பங்கொட்டைச் சாறு தெளித்தும், டைகுளோர்வாஸ் 76 ஈசி ஏக்கருக்கு 200 மிலி (அல்லது) பாசலோன் 35ஈசி ஏக்கருக்கு 400 மிலி என்ற அளவில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
மேலும் இதுபோன்ற தாக்குதல் மற்ற இடங்களில் தென்பட்டால் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயிர் பாதுகாப்பு முறைகளை தெரிந்து கொள்ளலாம்.

Source : Dinamani

No comments:

Post a Comment