Sunday, November 22, 2015

கோழிகளுக்கு வேகமாக பரவும் அம்மை நோய்; மழையால் கால்நடை வளர்ப்போர் அச்சம்


 கரூர் : கரூர் மாவட்டம் முழுவதும் பருவ மழை காரணமாக கோழிகளுக்கு அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் செய்வதறியாது கால்நடை வளர்ப்போர் அச்சத்துடன் உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில், கால்நடை வளர்ப்போர், தங்கள் வீடுகளின் பின்புறமும், கொட்டகை அமைத்தும் லட்சக்கணக்கான கோழிகள் வளர்த்து வருகின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், கடந்த மாதம் முதல் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்ததாலும், மக்கள் மட்டுமின்றி, கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

அறிவுரை வழங்கல்
மழை காலங்களில் கால்நடைகள் பாதிக்காவண்ணம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கரூர் மாவட்ட கால்நடை ஆராய்ச்சி பயிற்சி மையம், சில அறிவுரைகளை அளித்து வருகிறது. இருப்பினும், தற்போது மாவட்டம் முழுவதும் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள், சண்டைக் கோழிகள், வான்கோழி, பிராய்லர் கோழிகளுக்கு அம்மை நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

டாக்டர்கள் அலட்சியம்
இதுகுறித்து, கடவூர் பகுதியில் கோழி வளர்க்கும் விவசாயி பெரியசாமி தெரிவித்ததாவது:அம்மை நோய் பாதிப்புக்கு கால்நடை மருத்துவத்துறையினர் தான் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கால்நடை மருத்துவமனைகளில் கோழி, ஆடுகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. கால்நடைகள் என்றாலே டாக்டர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் கோழி வளர்ப்பவர்கள் மட்டுமின்றி சுற்றுப்புறத்தில் கால்நடை வளர்ப்பவர்களும் நோய் பரவல் காரணமாக பாதிக்கின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கரூர் மாவட்டம் தண்டுகாரண்புதுார் கால்நடை ஆராய்ச்சி பயிற்சி மைய இயக்குனர் அகிலா கூறியதாவது:பருவமழை மாற்றத்தால் அவ்வப்போது, கோழிகளுக்கும் அம்மை நோய் வரும். அதற்கு அறிகுறியாக கோழியின் மூக்கு, கண் போன்ற பகுதியில் சின்ன கொப்பளம் ஏற்படும். இதை வைத்தே அம்மை நோய் வந்துள்ளது என்பதை கண்டறியலாம்.

அம்மை வர வாய்ப்பு
குறிப்பாக, ஒரு மாத கோழி குஞ்சுகளுக்குத்தான் முதலில் அம்மை நோய் வரும். இதைக் கண்டறிந்து முதலில் அந்தக்கோழியை தனிமைப்படுத்த வேண்டும். கூட்டமாக விட்டால் இந்தக் கோழிகளுக்கு வந்த கொப்பளங்கள் வெடித்து அதிலிருந்து பரவும் வைரஸ் மற்ற கோழிகளுக்கும் பரவி அம்மை நோய் வரும்.
இதற்கு கிராமப்புறங்கள் மட்டுமின்றி அனைவருமே முதலில் வேப்பிலை, மஞ்சள் அரைத்து கோழிகளுக்கு ஏற்பட்ட கொப்பளத்தில் தடவி விடுவர். சில நாட்களில் சரியாகி, அந்த கொப்பளங்கள் தானாக உதிர்ந்து விடும்.

தடுப்பூசி கட்டாயம்
அப்படி சரியாகவில்லை என்றால், உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு கோழிகளைக் கொண்டு சென்று அம்மை நோய் தடுப்பூசி போட்டு பாதுகாக்கலாம்.இதன் மூலம் மட்டுமே கோழிகளைக் காப்பாற்ற முடியும். இதை சாதாரணமாக நான்கு, ஐந்து கோழி வளர்க்கும் பொதுமக்களும், அதிகளவில் கோழி வளர்ப்பவர்களும் கடை பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment