Friday, February 5, 2016

சிறுதானியங்களை பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் மாநில திட்ட குழு துணை தலைவர் தகவல்


T
திருவாரூர் மாவட்டத்தில் சிறுதானியங்களை பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என மாநில திட்டக்குழு துணை தலைவர் சாந்தஷீலா நாயர் கூறினார்.

சிறு தானிய பயிர்கள்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் விஸ்வநாதபுரம் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்தல் மற்றும் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டல் தொடர்பான திட்டத்தினை விளக்கும் விதமாக வயல் தினவிழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமை தாங்கினார். இதில் மாநில திட்டக்குழு துணை தலைவர் சாந்தஷீலா நாயர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அதிக லாபம்

மாநில திட்டக்குழுவின் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியில் இருந்து சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்தல் மற்றும் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டல் தொடர்பான திட்டத்தினை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டாரத்தில் செயல்படுத்திட ரூ.16 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் குதிரைவாலி சிறுதானியத்தினை உற்பத்தி செய்வதற்கு 20 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 20 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 12 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

குதிரை வாலியானது வறட்சியை தாங்கி வளரும் பயிராகும். இதனை உற்பத்தி செய்வதற்கு குறைவான தண்ணீரே போதுமானதாகும் அதே நேரத்தில் தண்ணீர் தேங்கியிருந்தாலும் விளைச்சல் பாதிப்படையாமல் வளரும் பயிராகும். எனவே சிறுதானியங்களை பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.

முக்கியமாக பெண்கள் விவசாயத்தில் முழுமையாக ஈடுபட வேண்டும். ஆகவே விவசாயிகள் நெல் மட்டும் என்பதை மாற்றி சிறு தானியங்களையும் பயிர் செய்து பயன்பெற வேண்டும். சிறுதானியங்களை உணவில் சேர்ப்பதால் பள்ளி குழந்தைகளின் அறிவு திறன் வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குறுந்தகடுகள்

அதனை தொடர்ந்து வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைதுறை மூலம் வெளியிடப்பட்ட சிறுதானிய உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் குழந்தைகளிடையே சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை பிரபலப்படுத்துதல் தொடர்பான குறுந்தகடுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதில் மாநில வேளாண்மை திட்டக்குழு தலைவர் ஜெகன்மோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி அம்பிகாபதி, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மயில்வாகனன், திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், வேளாண்மை துணை இயக்குனர் மதியழகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பெரியகருப்பன், வேளாண்மை உதவி இயக்குனா அசோகன் ஆகியோர் உடன் இருந்தனர். 


Source : Dailythanthi

No comments:

Post a Comment