Friday, February 26, 2016

வேளாண் மரபுத் தொழில் நுட்பங்களை மீட்டெடுக்க வேண்டும்: துணைவேந்தர்


வேளாண்மையில் மரபு வழியாக பின்பற்றிய தொழில் நுட்பங்களை மீட்டெடுத்து மண் வளத்தையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் பணியில் வேளாண்துறை மாணவர்கள் ஈடுபட வேண்டும் என கோவை வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.ராமசாமி தெரிவித்தார்.
  திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகத்தில் வியாழக்கிழமை, உயிரியல் மற்றும் சுற்றுச்சூழலியல் அறிவியலின் முன்னேற்றங்கள் என்ற கருத்தரங்கைத் தொடக்கி வைத்து அவர் பேசியது:
 நாட்டின் விடுதலைக்காக அதிக பங்களிப்பு செய்த மாநிலமாக இருக்கும் தமிழகத்தில், வேளாண் வளர்ச்சிக்காக மத்திய அரசு போதுமான திட்டங்களை செயல்படுத்தவில்லை. இருந்த போதும் தமிழகத்தில் முன்பை விட கடந்த 2 ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தி 112 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
 நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய உயிரியல் தொழில் நுட்பங்களை கைவிட்டு, மேற்கத்திய தொழில் நுட்பங்களை பின்பற்றத் தொடங்கிய பின், விவசாயிகள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
 குருகுலக் கல்வியின் மூலம் சாதனைகள் படைத்த இந்தியர்கள், மேற்கத்திய வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கிய பின் தோல்வியை சந்தித்து வருகின்றனர். ராமாயணத்தை இயற்றிய கம்பர், விவசாயத் தொழில் நுட்பங்கள் குறித்து, ஏர் எழுபது என்ற காப்பியத்தையும் படைத்துள்ளார். அதனை கற்றுக் கொள்ளத் தவறியதால், அன்றைய தொழில் நுட்பங்களையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
  உணவு, மருந்து மற்றும் ஆடைகள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை உற்பத்தி செய்யும் நாம், அதற்கான காப்புரிமை பெறுவது குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும். அதேபோல், மரபுத் தொழில் நுட்பங்களை மீட்டெடுத்து மண் வளத்தையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் பணியில் வேளாண்துறை மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.  நிகழ்ச்சிக்கு காந்தி கிராம கிராமியப் பல்கலை. துணைவேந்தர் சு.நடராஜன் தலைமை வகித்தார். அறிவியல் புலத் தலைவர் எம்.சுந்தரவடிவேலு, உயிரியல்துறைப் பேராசிரியர்கள் எம்.ஆர்.ராஜன், ஏ.டேவிட் ரவீந்திரன், பி.யூ.மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

source : dinamani

No comments:

Post a Comment