Friday, February 5, 2016

உளுந்து, துவரை பயிர்களை அதிகம் சாகுபடி செய்ய வேண்டும்

சேதுபாவாசத்திரம் வட்டாரம் ஊமத்தநாடு மற்றும் பள்ளத்தூர் ஆகிய கிராமங்களில் விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி தஞ்சை மாவட்ட துணை வேளாண்மை இயக்குநர் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி வரவேற்று பேசும்போது, தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல்வயல் வரப்புகளில் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கு 3 முதல் 4 கிலோ வரை சான்று பெற்ற உளுந்து விதை 100 ரூபாய் மானியத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. விதை கிராமத்திட்டத்தின் கீழ் 1 கிலோ விதைக்கு 25 ரூபாய் மானியமும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் பயறு திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக்கு உட்பட்ட பயறு ரகங்களுக்கு 25 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது.புறதச்சத்து பற்றாக்குறையை போக்கிட உளுந்து, துவரை போன்ற பயறு வகைப் பயிர்களை அதிக பரப்பில் சாகுபடி செய்திட வேண்டும் எனவும், உளுந்து தட்டைபயறு ஆகிய பயிர்கள் மண்ணுக்கு நல்ல அங்கக உரமாகவும் கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாகவும் பயன்படுத்தலாம் என்றார். 
மாவட்ட துணை வேளாண்மை இயக்குநர் இளஞ்செழியன் பேசுகையில், மண்வளத்தை பாதுகாத்திட தொழு உரங்களையும் சணப்பு, தக்கைப்பூண்டு, அகத்தி போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் எனவும், பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும்போது சுற்றுசூழலுக்கு பங்கம் விளைவிக்காத வகையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்திட சிந்தடிக் பைரித்ராய்ட்ஸ் போன்ற மருந்துகளை பயன்படுத்தும்போது நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்து, தீமை செய்யும் பூச்சிகளில் எதிர்ப்பு சக்தி தோன்றி கட்டுப்படுத்திட முடியாத அளவிற்கு பெருகிவிடும் என்றார். வேளாண்மை அலுவலர் சாந்தி பேசும்போது பயறு வகை பயிர்கள் விதைப்பு செய்வதற்கு முன் ரைசோப்பியம் மற்றும் டிரைக்கோடர்மா விருடி எனும் எதிர் உயிர் பூசனத்தை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து விதைத்திட வேண்டும். பூக்கும் தருணத்தில் 15 நாள் இடைவெளியில் இரண்டு முறை 2 சத டிஏபி கரைசலை தெளித்தால் காயாக மாறி பொக்கற்ற சுருக்கமற்ற திரட்சியான மகசூல் பெறலாம் என்றார். அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் முருகானந்தம், உதவி திட்ட மேலாளர்கள் ராஜீ, அய்யாமணி, உதவி வேளாண்மை அலுவலர்கள் பாலசுந்தர், நாடிமுத்து ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

source : Dinakaran

No comments:

Post a Comment