Wednesday, February 3, 2016

மண்வள அட்டை வழங்கல்: கூட்டத்தில் கலெக்டர் தகவல்

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் வேளாண்மைத்துறை சார்பில், விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, கலெக்டர் ராஜேஷ் பேசியதாவது: விவசாயத்தின் அடிப்படை ஆதாரம் மண்வளமாகும். வளமான மண்ணே அதிக விளைச்சலுக்கு ஒரு அங்கமாக திகழ்ந்து விளங்குகிறது. எனவே, வேளாண்த்துறையின் மூலம் இணையதளம் துவக்கப்பட்டு அதில் மண்வளம் குறித்து பதிவு விவரங்கள் பெறப்பட்டு தேவையான கருத்துகளை விவசாயிகளுக்கு குறுஞ்செய்திகள் மூலம் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில், இரண்டு ஆண்டுகளில் மாவட்டத்தில், ஒரு லட்சத்து, 46 ஆயிரத்து, 56 பண்ணை குடும்பங்களுக்கு மண்வள அட்டை வழங்க திட்டமிட்டுள்ளது. எட்டு வட்டாரங்களில், 10,346 மண் மாதிரிகள் சேகரித்து சோதனை நடத்தப்பட்டது. அதில், 17 ஆயிரத்து, 59 விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம், தேவையான உரமிடுவதால் முழுமையான வளர்ச்சி பெறுவதுடன், வீணான உரச்செலவு குறைந்து மண்ணின் வளமும் பாதுகாக்கப்படுகின்றது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு, ஒரு லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், 1.5 லட்சம் மெ.டன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், வேளாண்மை துறை இணை இயக்குனர் அல்தாப், துணை இயக்குனர்கள் மதனகோபால், சிவானந்தம், கலெக்டரின் நேர்முக உதவியாளார் (வேளாண்) ஜெயந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment