Friday, February 5, 2016

மலர், காய்கனி கண்காட்சி இன்று தொடக்கம்

வேளாண்துறை சார்பில், காரைக்காலில் மலர், காய்கனி கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இக்கண்காட்சி, விற்பனைக்காக பெங்களூரு, புனேயிலிருந்து மலர் செடிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
வீட்டுத் தோட்டம், நிறுவனத் தோட்டம், நிலையத் தோட்டம், மாடித் தோட்டம், பள்ளித் தோட்டம், வீட்டுக் காய்கறித் தோட்டம், தென்னந்தோப்பு, பழத்தோப்பு, பூந்தோட்டம் உள்ளிட்டவைகளை அமைப்பதில் மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் காரைக்காலில் மலர், காய்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2011-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த இக்கண்காட்சி அதன்பின்னர் நிதி நெருக்கடி, புயல் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் நடத்தப்படவில்லை. நிகழாண்டு 17-ஆவது மலர் கண்காட்சி புதுவை அரசின் வேளாண் துறை சார்பில் நடத்தப்படுகிறது.
இக்கண்காட்சி காரைக்கால் முருகராம் நகர் அருகே உள்ள நகராட்சித் திடலில் வெள்ளிக்கிழமை (பிப்.5) முதல் 7-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
இதற்காக பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு  பூந்தொட்டிகள், அலங்காரச் செடிகள், மலர் செடிகள், பழக்கன்றுகள் தனித்தனி பிரிவுகளாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சி நடைபெறும் 3 நாள்களும் பாசிக் நிறுவனம் சார்பில் பூச்செடிகள், கன்றுகள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர வேளாண் உபகரணங்கள் பலவும் மானிய விலையில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் கா.மதியழகன் வியாழக்கிழமை கூறியது: வேளாண்துறை சார்பில் காரைக்காலில்  ரூ. 30 லட்சம் மதிப்பில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
காரைக்கால் பகுதியினருக்கு தோட்டக்கலை, மலர், பழம் உள்ளிட்ட சாகுபடியில் ஆர்வம் ஏற்படும் நோக்கில்  இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு பிரிவினரிடையே கண்காட்சி தொடர்பாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில், வெற்றி பெற்றவர்களுக்கு நிறைவு நாளின்போது பரிசு வழங்கப்படும். கண்காட்சி நிறைவடைந்த பிறகு கண்காட்சியில் வைக்கப்பட்ட செடிகள் விற்பனை செய்யப்படும் என்றார்.

Source : Dinamani

No comments:

Post a Comment