Thursday, February 4, 2016

மலை மீது மலர் வளர்த்தால் 50 சதவீத மானியம்


'பசுமைக்குடில் அமைக்க, 50 சதவீதம் மானியம் வழங்கி வருவதால், மலர் உற்பத்தி செய்யும் பரப்பளவு அதிகரித்து வருகிறது' என, தெரிவிக்கப்பட்டது.
கோத்தகிரியில் காளான் வளர்ப்பு மற்றும் கொய்மலர் சாகுபடியை பார்வையிட்ட கலெக்டர் சங்கர், நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரியில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டத்தில், நடப்பாண்டு, 491.08 லட்சம் ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், காய்கறி, வாசனை பயிர்கள், பயிர் வினியோகம், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பழம் மற்றும் காய்கறி சாகுபடி செய்தல், தோட்டக்கலை பயிர்கள் இயந்திரமாக்குதல் பயிற்சி வழங்குதல் மற்றும் அறுவடைக்கு பின் நேர்த்தி செய்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கோத்தகிரியில் நடப்பாண்டு, வங்கி கடன் உதவியுடன் கூடிய பின்னேற்பு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், காளான் உற்பத்தி, கம்போஸ்ட் உரம் தயாரிக்க, 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 40 சதவீத மானியமாக, 16 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு, இரண்டு நபர்களுக்கு, 32 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், மலர் உற்பத்தி செய்வதற்காக, 4,000 ச.மீ., பரப்பளவில் பசுமைக்குடில் அமைக்க, 16.88 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று, மாவட்டத்தில், 69 ஆயிரத்து, 750 ச.மீ., பரப்பளவில், 326 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த, 5 ஆண்டுகளில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில், பசுமைக்குடில் அமைக்க, 50 சதவீதம் மானியம் வழங்கியதன் மூலம், மலர் உற்பத்தி பரப்பளவு, ஒன்பது எக்டராக உயர்ந்துள்ளது.
நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், 100 சதவீத மானியத்தில், 2,078 எக்டர் பரப்பளவுக்கு பாசன கருவிகள் வழங்கியதன் வாயிலாக, 900 எக்டர் பரப்பளவில் காய்கறி உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எச்.ஏ.டி.பி., திட்டத்தில், 50 சதவீத மானியத்தில் உயர் விளைச்சல் காய்கறி விதைகள் வழங்கப்பட்டதால், 25 சதவீதம் காய்கறி உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது.
மேலும், 81 பவர் டில்லர், 25 மினி டிரேக்டர் மற்றும் இதர வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டதால், 2,078 எக்டர் பரப்பளவில் தெளிப்பு நீர் பாசன கருவிகள் வழங்கி, வேலையாட்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பூங்காக்களில், கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தொட்டபெட்டா அரசு தேயிலை பூங்கா, கூடலுார் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகளுக்காக புதிதாக திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, கலெக்டர் சங்கர் தெரிவித்தார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment