
உடல் ஆரோக்கியத்தை தேடி பயணிக்கும் இயந்திர உலகில், இயற்கை மருந்தாய் கிடைத்திருப்பது காய்களும், பழங்களும் தான். இதில், தான் நம் உடலுக்கு தேவையான, அனைத்து முக்கிய சத்துக்களும் நிறைந்துள்ளன. காய்கறி நிறம், மணம், சுவையை உள்ளடக்கியது. காய்கறிகளில் இருந்து மாவுச்சத்து, புரதம், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை கிடைக்கின்றன. காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்...
நார்ச்சத்து:
காய்களில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தூண்டி, மலச்சிக்கலை தவிர்க்கிறது. உணவுக் குழாயில் எளிதாக பயணிக்க நார்ச்சத்து உதவும்.
வைட்டமின் சத்து:
பச்சை இலை காய்களில், கீரைகளில் தான் அதிகளவில் வைட்டமின் இருக்கிறது. முக்கியமாக கரோட்டின் இருக்கிறது. கரோட்டின் நம் உடம்பில் வைட்டமின்-ஏ ஆக மாற்றப்படுகிறது. இது கண் பார்வையை சீராக்குகிறது. மாலைக்கண் நோயை தடுக்கிறது. கீரை வகைகளில் கரோட்டினுடன் ரைபோபிளேவின் மற்றும் வைட்டமின் சியும் அதிகளவில் உள்ளது.
தாது உப்புகள்:
தண்டுகீரை, அகத்தி, வெந்தயக்கீரை மற்றும் முருங்கைக் கீரையில் கால்சியம் அதிகளவில் காணப்படுகிறது. கீரை வகைகளில் இரும்புச் சத்தும் நிறைந்து காணப்படுகிறது. தினமும் நம் உணவுடன், 50 கிராம் கீரையை சேர்த்துக் கொண்டால் நமக்கு ஒரு நாளைக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம், கரோட்டின், வைட்டமின் சி ஆகியவை கிடைத்துவிடும். இவ்வளவு சத்துக்கள் நிறைந்த காய்களை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழும் போது, மனமும் எவ்வித பிரச்னையை தாங்கக் கூடிய தன்னம்பிக்கையை பெறுகிறது. ஆகவே, ஆரோக்கியமே அனைத்திற்கும் முக்கிய காரணம் என்பதை உணர்ந்து, காய்கறிகளை உணவில் சேர்க்க முன் வரவேண்டும்.
Source : Dinakaran
No comments:
Post a Comment