Monday, March 28, 2016

நாடு முழுவதும் 5 லட்சம் பண்ணைக் குட்டைகள் அமைப்பு


நிலத்தடி நீர்மட்டம் குறைவதைத் தடுப்பதற்கு, நாடு முழுவதும் 5 லட்சம் பண்ணைக் குட்டைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
"மனதின் குரல்' (மன் கீ பாத்) என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் உரையாற்றி வரும் அவர், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) சுமார் 30 நிமிடங்கள் பேசினார். அவர் பேசியதாவது:
விவசாயிகள் உரங்களை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான உரங்கள், மண்ணின் வளத்தை பாதிப்புக்குள்ளாக்கும். இதனால், உரத்துக்கு செலவிடும் தொகையும் குறையும். செலவைக் குறைத்து, உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகளை விவசாயிகள் கையாள வேண்டும்.
இதுதவிர, "டிஜிட்டல் இந்தியா' திட்டம், நகர்ப்புற இளைஞர்களுக்காக மட்டுமன்றி, வேளாண் சமூகத்தினரின் நலனுக்காகவும் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
வானிலை நிலவரம், வேளாண் பொருள்களின் விலை ஆகியவை குறித்த தகவல்களை, "கிஸான் சுவிதா ஆப்' என்ற செல்லிடப்பேசி செயலி மூலம் விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம்.
எனவே, விவசாயிகள் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
நாட்டின் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. எனவே, அத்தியாவசியத் தேவையைக் கருதி, நீரைப் பாதுகாப்பதற்காக, சிறிய அளவிலான நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக, நாடு முழுவதும் 5 லட்சம் பண்ணைக் குட்டைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழும், நீரைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பேத்கர் 125-ஆவது பிறந்த தினம்: சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த இடமான "மவ்' கிராமம், அவர் கல்வி பயின்றபோது வசித்த லண்டன் இல்லம், அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய நாகபுரி, அவர் மறைந்த தில்லி, அலிப்பூர் சாலை இல்லம், மும்பையில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்ற இடம் ஆகிய 5 இடங்களிலும் நினைவகங்கள் கட்டுவதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அம்பேத்கரின் 125ஆவது பிறந்த தினமான, வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி, அவர் பிறந்த கிராமத்துக்குச் சென்று, அவருக்கு மரியாதை செலுத்த இருக்கிறேன்.
இந்தியாவுக்கு வாய்ப்பு: இளையோர் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளன. சர்வதேச அளவில் நடைபெறவுள்ள அந்தப் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியாவுக்கு மாபெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
வரப்போகும் கோடை விடுமுறையில் மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் நீரிழிவு நோயை வெல்ல வேண்டும்; காசநோயை ஒழிக்க வேண்டும் என்று மோடி கூறினார்.
இதனிடையே, நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காசநோய் பரிசோதனை செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை ஜே.பி.நட்டா கூறினார்.

Source : Dinamani

No comments:

Post a Comment