Wednesday, March 2, 2016

விவசாயிகளுக்கு மண்வள அட்டை8000:இம்மாத இறுதிக்குள் வழங்க உத்தரவு


திண்டுக்கல்லில் 2ம் கட்ட மண் பரிசோதனை ஆய்வு செய்து, இம்மாத இறுதிக்குள் கூடுதலாக 8 ஆயிரம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தேசிய மண்வள அட்டை இயக்கம் செயல்பட்டு வருகிறது. மண்வளத்தை பற்றி முழுமையாக அறிய, மண்ணிலுள்ள சத்துக்களின் விவரங்களை அட்டவணைப்படுத்தி, அதில் என்ன பயிர் வகைகளை விளைவிக்கலாம் என்பதை குறிக்கும் மண் வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் மண்ணுக்கேற்ற சத்துடைய உரமிடுவர். அதனால் மண்ணின் தன்மை மாறி விளைச்சல் அதிகரிக்கும். மத்திய அரசு இம்மண்வள அட்டை திட்டத்தை கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. 2017க்குள் அந்தந்த பகுதிகளில் குறிப்பிட்ட இடத்தில் சிறிதளவு மண்ணின் மாதிரியை சோதனை செய்து, அதன் தன்மையை ஜி.பி.எஸ்., மூலம் எல்லோரும் அறிந்து கொள்ளும் விதமாக கணினியில் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனால் இணைய தளம் மூலமாகவும் பல்வேறு இடங்களில் உள்ள மண்ணின் தன்மை, அதில் விளையும் பயிர்களின் விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளலாம். கூடுதலாக 8 ஆயிரம் அட்டை:திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு நீர் மற்றும் நீரற்ற நிலபரப்பு என பல்வேறு இடங்களில் மண் மாதிரி பரிசோதனை செய்து 10 ஆயிரத்து 540 மண்மாதிரி சோதனைகளுடன் மண்வள அட்டை வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மார்ச் 2017க்குள் 14 கோடி விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க உள்ளதாக குறிப்பிட்டார். இதனையடுத்து மாநிலம் முழுவதும் மண் மாதிரி பரிசோதனை ஆய்வு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து இம்மாத இறுதிக்குள் திண்டுக்கல்லில் 2ம் கட்ட மண் பரிசோதனை ஆய்வு செய்து, கூடுதலாக 8 ஆயிரம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

source : Dinamalar

No comments:

Post a Comment