Wednesday, March 2, 2016

வேளாண் இயந்திரங்கள் வழங்க ரூ.55.28 லட்சம் ஒதுக்கீடு


திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்க ரூ.55.28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிட விவசாயிகள், சிறு, குறு  விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு ரூ.10.08 லட்சமும், இதர விவசாயிகளுக்கு ரூ.8.43 லட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், ஆதி திராவிட விவசாயிகளுக்கு, ரூ.6.13 லட்சமும், இதர விவசாயிகளுக்கு ரூ.30.64 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் சுழல் கலப்பை, நாற்று நடும் கருவி, களை எடுக்கும் கருவி, உழுவை 15-20 ஹெச்பி, 20-40 ஹெச்பி, 40-70 ஹெச்பி மற்றும் குழிதோண்டும் கருவி, விசை தெளிப்பான், விசை உழுவை, கையினால் இயக்கப்படும் கருவிகள் மானியத்தில் வழங்கப்படவுள்ளன.
விவசாயிகள் தங்களுக்கு தேவையான கருவிகளைப் பெற திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவியில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் பட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல் மற்றும் விண்ணப்பதாரரின் புகைப்படம் 2 ஆகியவற்றை இணைத்து விவசாயி நேரில் வந்து அலுவலகப் பதிவேட்டில் கையொப்பமிட்டு பதிவு செய்ய வேண்டும்.
முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும் நிதிக்கேற்ப தகுதியான விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு கருவிகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி அலுவலகத்தை 0462-2552572, 94433 65790 என்ற எண்களிலும், சேரன்மகாதேவி அலுவலகத்தை 94431 53243 என்ற எண்ணிலும், தென்காசி அலுவலகத்தை 04633  280160, 94883 78904 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

Source : Dinamani

No comments:

Post a Comment