உளுந்து மற்றும் நிலக்கடலை பயிரில் களைக்கொல்லி பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு ராபி பருவத்தில் தோட்டக்கால் நிலங்களிலும், சம்பா நெற்பயிர் அறுவடை செய்யப்படும் இடங்களிலும் உளுந்து மற்றும் நிலக்கடலை விதைப்பு செய்யும் பொழுது அளவிற்கு அதிகமான களை செடிகள் மண்டி வளர வாய்ப்புள்ளது. இந்த களைச் செடிகள் பல்மடங்கு பெருகி வளர்ந்து தானிய வகை பயிர்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது. இடும் நீர் மற்றும் உரச்சத்துகளை 30-40 சதம் வரை களைகள் எடுத்துக் கொள்கிறது. இதனால் தானியப் பயிர்களான உளுந்து மற்றும் நிலக்கடலை பயிரில் 25-30 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதனை உணர்ந்த மத்திய, மாநில அரசுகள் களைச் செடிகளை கட்டுப்படுத்த களைக்கொல்லி பயன்படுத்துவதற்கு 50 சதவீத மானியம் அறிவித்துள்ளது. இதன்படி விவசாயிகள் உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் தேவைக்கேற்ற களைக்கொல்லிகளை பயன்படுத்தினால் 50 சத அரசு மானியம் வழங்கப்படும். இதற்கு விவசாயிகள் அருகாமையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் விற்பனை மையங்களில் களைக்கொல்லி மருந்துகளை ரொக்க விலைக்கு பெற்று, ரொக்க ரசீது பட்டியலுடன் உங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரை சந்தித்து முறையான மானிய பரிந்துரை விண்ணப்பம் பெற்று, உளுந்து மற்றும் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளமைக்கான சான்றாவனம், ரேசன் கார்டு ஜெராக்ஸ் நகல், ஆளறிதல் குறித்த போட்டோ, ஆதார் அடையாள எண், வங்கி பாஸ்புத்தகத்தின் ஜெராக்ஸ் நகல் ஆகிய ஆவணங்களை விரிவாக்க அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அலுவலக கூர்ந்தாய்வு மற்றும் பரிசீலனைக்கு பின்னர் களைக்கொல்லி மருந்தின் மொத்த மதிப்பில் 50 சதம் (அல்லது) எக்டேருக்கு ரூ.500 இதில் எது குறைவோ அது மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வரவு வைக்கப்படும். உளுந்து பயிருக்கு தேசீய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு விவசாயி 2 எக்டேரும், நிலக்கடலை பயிருக்கு தேசிய எண்ணெய் வித்துக்கள் மிஷன் 1 திட்டத்தின் கீழ் 1 எக்டேருக்கும் மான்யம் பெற தகுதி உடையவர்கள் ஆவர். மேற்படி திட்டங்களின் கீழ் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்கள் (அல்லது) திருவோணம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment