மாவட்டத்தில் 15,000 சதுர மீட்டரில் பசுமை குடில் அமைத்து காய்கறி சாகுபடி செய்ய தோட்டக்கலை துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர் அதிகம் சாகுபடியாகும். சாகுபடி முறைகளில் நோய் பாதிப்பு, மகசூல் அதிகரிப்பால் விலை குறைவு போன்ற சவால்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். விவசாயிகள் ஆண்டு முழுவதும் காய்கறி சாகுபடி செய்யும் நோக்கில் "இஸ்ரேல்' தொழில் நுட்ப பசுமைகுடில் சாகுபடி முறைகளை தோட்டக்கலை துறை அறிமுகம் செய்து வருகின்றது. தேசிய தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலம் மாவட்டத்தில் 2015-2016ல் 15,000 சதுர மீட்டரில் பசுமை குடில் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். ஒரு விவசாயிக்கு ஆயிரம் சதுர மீட்டர் முதல் 4 ஆயிரம் சதுர மீட்டர் வரையில் பசுமை குடில் 50 சதவீத மானியத்தில் அமைத்து தரப்படும். ஒரு பசுமை குடில் அமைத்தால் 15 ஆண்டுகள் பயன்தரும். மேற்கூரையினை மட்டும் 5 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றி தொடர்ந்து ஆண்டு முழுவதும் நவீன தொழில் நுட்பத்தில் காய்கறி சாகுபடி செய்யலாம். ஆயிரம் சதுர மீட்டரில் பசுமை குடில் அமைக்க ரூ.9.35 லட்சம் செலவாகும். இதில் 50 சதவீத மானியமாக அதாவது அரசு ரூ.4.67,500 வழங்குகிறது. இத் திட்டத்தில் 8 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பசுமை குடில் அமைத்து சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக்கலை அலுவலர்களை அணுகி விபரங்கள் பெறலாம் என தேனி தோட்டக்கலை துணை இயக்குனர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்.
Source : Dinamalar
Source : Dinamalar
No comments:
Post a Comment