Wednesday, August 19, 2015

இயந்திர முறையில் நெல் நடவுப் பயிற்சி



உழவர் பயிற்சி நிலையத்தின் சார்பில், புதுக்கோட்டை அருகே கூவாட்டுப்பட்டியில் விவசாயிகளுக்கு இயந்திர முறையில் நெல் நடவுப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பயிற்சியை வேளாண் துணை இயக்குநர் வ. சாந்தி தொடக்கி வைத்து உழவர் பயிற்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், பயிற்சியில் கற்ற தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து மிகுந்த மகசூல் பெறுவதுடன் அதை மற்ற விவசாயிகளுக்கும் கற்றுத் தர வேண்டும் என்றார்.
வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் தனலெட்சுமி பேசுகையில், தோட்டக்கலைப் பயிர்களில் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிலம், நீர், உரப் பயன்பாட்டில் குறைந்த செலவில் மிகுந்த மகசூல் பெறும் வழிவகைகளை எடுத்துக் கூறினார். குறைந்த நீரைப் பயன்படுத்திச் சாகுபடி செய்யக்கூடிய காய்கறிகள், மலர்கள் பற்றிய சாகுபடித் தொழில் நுட்பங்களை விளக்கினார்.
அன்னவாசல் வேளாண் உதவி இயக்குநர் சிங்காரம் பேசுகையில், இயந்திரம் நெல் நாற்றங்கால் விடுதல், நடவு முறை குறித்தும் அவற்றுக்கான மானியமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 3,000 வழங்கப்படுவது குறித்தும், நடப்பாண்டில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் இயந்திர முறையில் நெல் நடவு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினார். மேலும், மானியம் பெறுதலுக்கு விவசாயிகள் தங்களுடைய குடும்ப அட்டை, கணினிச் சிட்டா, வரைப்படம், வங்கிக் கணக்குப் புத்தக நகல், புகைப்படம் ஆகியவற்றை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கி முன்னுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டுமெனவும், உளுந்துச் சாகுபடியில் மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்ட வம்பன்-5, வம்பன்-6 ரகங்களைப் பயிரிடவும் உளுந்து விதைகளை முளைகட்டி விதைத்தலால் பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படுவது குறித்தும் தெரிவித்தார்.
தோட்டக்கலைத் துறை உதவி வேளாண் அலுவலர் தேவராஜ் பேசுகையில், தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்களான புதிய தோட்டங்கள் அமைத்தல், பசுமைக்குடில் அமைத்தல், நிழல்வலைக் கூடாரம் அமைத்தல், சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தல், வீரிய ஒட்டு இரகக் காய்கறி விதையுற்பத்தி குறித்தும் விளக்கிப் பேசினார்.
நிறைவாக உழவர் மன்ற அமைப்பாளர் கூவாட்டுப்பட்டி முருகேசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment