Monday, August 31, 2015

பசுந்தாள் உரப்பயிர் விதைப்பு: விவசாயிகளுக்கு 50% பின்னேற்பு மானியம்



அண்ணாகிராமம் வட்டாரத்தில் பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பை விதைத்துள்ள விவசாயிகள், 50 சதவீதம் பின்னேற்பு மானியம் பெற்றுக்கொள்ளும்படி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இளவரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
 பயிர் சாகுபடியில் அதிக மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பெருமளவு ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தொடர்ந்து பயன்படுத்துவதால் மண்ணின் தன்மையும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
 மண் வளத்தைப் பாதுகாக்கக் கூடிய சாண எரு, குப்பை எரு, தொழு உரம் போன்றவற்றை இடுவதும் குறைந்துவிட்டது. இயற்கை எருவுக்கு மாற்றாக பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பை, நரிபயறு போன்றவற்றை பயிரிட்டு மடக்கி உழுவதன் மூலம் மண்ணின் வளத்தை பாதுகாக்க முடியும்.
 மேலும், இதன்மூலம் 15 முதல் 20 டன்கள் பசுந்தாள் உரம் மண்ணுக்குக் கிடைப்பதோடு, 50 முதல் 70 கிலோ தழைச்சத்து, 10 முதல் 20 கிலோ மணிச்சத்து, 40 முதல் 60 கிலோ சாம்பல் சத்து ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு கிடைக்கும். இதனால் உரச் செலவை மிச்சப்படுத்த முடியும்.
 தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் 2015-16ன் கீழ் மண்வளத்தை மேம்படுத்துவதற்காக தக்கைப்பூண்டு, சணப்பை போன்ற பசுந்தாள் உரப்பயிர்கள் விதைப்பு செய்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத பின்னேற்பு மானியமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.2,000 வீதம் வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு இரண்டு ஹெக்டர் வரை மானியம் வழங்கப்படும்.
 அண்ணாகிராமம் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் பசுந்தாள் உரப்பயிர் விதைப்பு செய்துள்ள விவசாயிகள் அதற்கான புகைப்படம், விதை வாங்கியதற்கான பட்டியல் மற்றும் சாகுபடி விவரங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும்.
மேலும், விவரங்களுக்கு அண்ணாகிராமம் மற்றும் புதுப்பேட்டை வேளாண்மை விரிவாக்க மையங்களையும் தொடர்பு கொள்ளும்படி அதில் தெரிவித்துள்ளார்.



http://www.dinamani.com/edition_villupuram/cuddalore/2015/08/30/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/article3001081.ece

No comments:

Post a Comment