Sunday, August 30, 2015

3.53 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம்



நாமக்கல்: ""மாவட்டத்தில், 3.53 லட்சம் கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் தட்சிணாமூர்த்தி கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில், 9வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி முகாம் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.


நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், செப்டம்பர், 1ம் தேதி முதல், 21ம் தேதி வரை, கால்நடைகளுக்கான, 9வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி முகாம் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 3.53 லட்சம் கால்நடைகளுக்கு, முழுமையாக இத்தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், நாளை (ஆக., 31) சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கிராமசபை கூட்டத்தில், கிராம மக்கள் அனைவரும் பங்கேற்று, கால்நடை மருத்துவர்கள் கூறும் அறிவுரைப்படி, அவர்கள் குறிப்பிடப்படும் தேதியில், கால்நடைகளை அழைத்துச் சென்று கட்டாயம் கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும். இத்தடுப்பூசி பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்டு, 111 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று, அந்தந்த கிராமங்களிலேயே தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட விவசாயிகள், மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை அழைத்துச் சென்று கோமாரிநோய் தடுப்பூசி தவறாமல் போட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சக்திவேல், துணை இயக்குனர் அர்த்தனாரி, பஞ்சாயத்து உதவி இயக்குனர் சந்திரசேகர் அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Source: 

No comments:

Post a Comment