Monday, August 31, 2015

விவசாயிகள் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்_ - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் உறுதி__


தி இந்து- நிலமும் வளமும்’, ‘கிரியேட்- நமது நெல்லைக் காப்போம்அமைப்பு இணைந்து நடத்திய இயற்கை வேளாண் திருவிழா
விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் விவசாயத்தில் வெற்றி பெறுவது நிச்சயம் என்றார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.ராமசாமி.
தி இந்து- நிலமும் வளமும்’- ‘கிரியேட்- நமது நெல்லைக் காப்போம்அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த இயற்கை வேளாண் திருவிழா திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியின் வித்யா சேவா ரத்னம் கே.சந்தானம் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும், இயற்கை வேளாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து, அதில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் அனுபவப் பகிர்வுக்கான களமாகவும் இந்த திருவிழா நடத்தப்பட்டது.
விழாவுக்கு கிரியேட் நிர்வாக இயக்குநர் ஆர்.பொன்னம்பலம் தலைமை வகித்தார். நபார்டு வங்கியின் உதவிப் பொது மேலாளர் எஸ்.சுரேஷ்குமார், ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரிச் செயலாளர் எஸ்.குஞ்சிதபாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி இந்துதமிழ்- இணைப்பிதழ்கள் ஆசிரியர் அரவிந்தன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து அறிமுகவுரையாற்றினார். தலைமை நிருபர் வி.தேவதாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
கருத்தரங்கை தொடங்கிவைத்து கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.ராமசாமி பேசியதாவது:
பஞ்சகவ்யத்தில் 200 வகை உள்ளது. ஆனால், அவற்றிலும் 93 வகை வேதிப் பொருட்கள் உள்ளன. எனவே, இயற்கை, செயற்கை என்று பகுத்துப் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில், பயிர் எப்போதும் அங்ககப் பொருளாகத்தான் எடுத்துக்கொள்ளும். ரசாயன உரமாக இடும்போது 20 சதவீதம் சத்துகள் மட்டும்தான் பயிருக்குக் கிடைக்கும். எஞ்சியவை ஆவியாகவோ, தண்ணீரில் கலந்தோ வீணாகிவிடும். அதேவேளையில், தொழுஉரமாகவோ, பசுந்தாள் உரமாகவோ இட்டால் 80 சதவீத சத்துகள் பயிருக்குக் கிடைக்கும். எனவே, விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சீனாவில் பயிர்களுக்கு இடுவதற்காக சத்து மாத்திரைகள் வந்துவிட்டன.
வாழைக்கு முட்டுக் கொடுப்பதுபோல, விவசாயத்துக்கு உதவதி இந்துமுன்வந்துள்ளது. எனவே, நாமும் விவசாயத்தில் ஏதாவது செய்ய முன்வருவோருக்கு உதவ வேண்டும். நம்மிடம் எதுவும் இல்லை என்று நினைக்க வேண்டாம். நம்மிடம் ஒற்றுமை எண்ணம் இல்லை.
கிராமங்களில் விவசாயிகள் ஒற்றுமையாக செயல்பட்டு நடவு, அறுவடைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் தீர்மானித்து, ஒன்றுபட்டு, கைகோத்து செயல்பட்டால் வெற்றியும் வளமான வாழ்வும் நிச்சயம் என்றார்.
முன்னதாக தலைமை வகித்த கிரியேட் நிர்வாக இயக்குநர் ஆர்.பொன்னம்பலம் பேசியபோது, ‘‘ஜெர்மனியில் அடுத்த தலைமுறை யினருக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக ஆண்டில் சில மாதங்கள் அந்த நாட்டினர் நாளொன்றுக்கு ஒரு வேளை உணவைச் சேமிக்கின்றனர். இதை அந்த நாட்டினர் பரம்பரையாக செய்து வருகின்றனர்.
நம் நாட்டில் தற்போது விளை நிலம் விலை நிலமாக மாற்றப் படுவதால் நில கொள் கையில் மாற்றம் கொண்டுவர வேண்டியுள்ளது. விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளித்த வேளாண் விளைபொருள் சட்டமும் திருத்தம் செய்யப் பட்டுள்ளது. எங்களால் இதுவரை சுமார் 28,000 பேருக்கு விதை கொடுக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு விவசா யியும் தனக்குத் தேவையான வற்றை தானே தயா ரித்துக் கொள்வதோடு விதை வங்கியாளராக மாற வேண்டும் என்றார்.__
இந்த வேளாண் திருவிழாவை நபார்டு வங்கி, சூர்யா பவர் மேஜிக் நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
விவசாயிகளின் நலனுக்காக திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி நிர்வாகம், அரங்கத்தை அளித்து உதவியது.
இயற்கை விவசாயத் திட்டங்களை ஏற்படுத்தி மக்களை காக்கவேண்டும்’_
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் அங்கக ஆராய்ச்சிப் பயிலக இயக்குநர் அல்லீஸ் பாக் பேசியதாவது:
ஆஸ்திரேலியாவுக்கு பொறியியல் படிக்க என்னை அனுப்பினர். ஆனால், நான் அங்கு விவசாயத்தைப் படித்தேன். ஆஸ்திரேலியாவில் மட்டுமன்றி இந்தியாவின் முதுகெலும்பும் விவசாயம்தான். ஆனால், இங்கு விவசாயம் கண்டுகொள்ளப்படவில்லை.
இளைஞர்களை விவசாயத்தின்பால் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து பணியாற்றினேன். மிகநுட்பமான ஆழமான தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுத்தார் அவர். அனைவரும் நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்ய வேண்டும். அதை அனைவருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். நஞ்சில்லா உணவை அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று நினைத்தவர் நம்மாழ்வார்.
பயிர்களுக்கு அனைத்துவித சத்துகளையும் இயற்கை வழியில் கொடுக்க முடியும். இதற்கு உரிய பயிற்சி அளித்து வருகிறோம்.
நமது மண்ணைப் பாதுகாத்து, ஒருங்கிணைந்த பண்ணையம் செய்தால் உலக அளவில் தலைநிமிர்ந்து வாழ முடியும். அதிக இயற்கை விவசாயத் திட்டங்களை ஏற்படுத்தி மக்களை காக்கவேண்டும் என்றார்._
சாதாரண மக்களைச் சென்றடையும்போதுதான் இயற்கை விவசாய விளைபொருளின் தேவை அதிகரிக்கும்’_
நபார்டு வங்கியின் உதவிப் பொது மேலாளர் எஸ்.சுரேஷ்குமார் பேசியதாவது:
நாட்டில் உள்ள 180 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் 2 சதவீத நிலத்தில்தான் இயற்கை முறையில் விவசாயம் நடைபெறுகிறது. மற்ற நிலங்களில் ரசாயன முறையில்தான் விவசாயம் நடைபெறுகிறது. இதனால் மண் வளத்தை இழந்துள்ளது. பயிர்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இயற்கை விவசாயத்தில் இடுபொருட்கள் செலவு குறைவென்றாலும் உற்பத்தி பெருகியதாகத் தெரியவில்லை. இம்முறையிலான சாகுபடிக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியத் திட்டங்கள் வழங்கினாலும் வங்கிக் கடன் வழங்கப்படுவதில்லை. அதற்காக, இயற்கை விவசாயிகள் ஒருங்கிணைந்து உற்பத்தியாளர் நிறுவனத்தை உருவாக்கினால் அந்த நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு வங்கியிலிருந்து கடன் பெறலாம். விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான சான்றிதழ்களையும் எளிதில் பெறலாம்.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என்றைக்கு சாதா ரண மக்களைச் சென்றடைகிறதோ அப்போதுதான் அதற்கான தேவை அதிகரிக்கும். உற்பத்தியும் பெருகும். லாபமும் கிடைக்கும் என்றார்._
பாரம்பரியமாக விளைவிக்கப்பட்ட இயற்கை உணவை உட்கொள்ள வேண்டும்’_
சென்னையைச் சேர்ந்த தமிழர் மரபியல் நிறுவனத்தின் நிறுவனர் பா.செந்தில்குமார் பேசியதாவது:
இந்தியாவில் நஞ்சில்லாத பால் மற்றும் உணவு எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை வெளிநாட்டினர் இங்கு வந்து அறிந்து செல்கின்றனர்.
நமக்கு அனைத்து வசதிகளும் இருந்தாலும் உணவை விஷமாக உட்கொண்டு வருகிறோம். இயற்கை சார்ந்த பொருள்களை விவசாயத்தில் பயன்படுத்துவதன் மூலம் நஞ்சில்லாத உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யலாம்.
முடிந்தவரை பாரம்பரியமாக விளைவிக்கப்பட்ட இயற்கை உணவுகளை உட்கொள்ளவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் வேண்டும்.
பள்ளிகளில் விதை வங்கியை உருவாக்கி மாணவர்களுக்கு விதைகளை வழங்கி, அவற்றை இயற்கை முறையில் விளைவித்து, மீண்டும் விதை உற்பத்தியை தொடங்கும் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறோம்.
இயற்கை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் இயற்கை பொருட்கள் குறித்து எங்களுக்கு குறுந்தகவல் (98848 28160) மூலமாக தகவல் தெரிவித்தால், தேவைப்படும் நுகர்வோரை நேரடியாக தொடர்பு கொள்ளச்செய்து விற்பனை வாய்ப்புகளையும் ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்._
ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் நாட்டுப் பசும்பாலுக்கு நல்ல வரவேற்பு’_
திண்டிவனம் அரீயா பால் பண்ணை மேலாண்மை இயக்குநர் அஹ்மத் பேசியதாவது:
நாட்டுப் பசுக்கள் வளர்ப்பில் நல்ல லாபம் உள்ளது. ஆனால் அவை தரும் பாலை, வைரத்தின் அளவுக்கு விற்பதற்கு பதில் கருங்கல் அளவுக்கு விற்றுவிடுகிறோம்.
இங்கு நாட்டுப் பசுவிலிருந்து கறக்கப்படும் ஒரு லிட்டர் பாலில் இருந்து 40 லிட்டர் அளவுக்கு மோர் கிடைக்கிறது. மக்கள் குறைவாக உள்ள நாடுகளில் ஒரு மாடு கொடுக்கும் 40 லிட்டர் பால் ஒரு கிலோ நெய்யாகவும், மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியா போன்ற நாடுகளில் நாட்டுப் பசு கொடுக்கும் ஒரு லிட்டர் பால், 40 லிட்டர் மோராகவும் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, ஜெர்சி வகை மாடுகளிலிருந்து கிடைக்கும் -1 வகை பாலை அருந்துவதால் உடலில் நோய்கள் உண்டாகின்றன.
எனவே ஜெர்சி ரக மாடுகளிலிருந்து கிடைக்கும் பாலை அருந்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். நாட்டுப் பசுக்கள் தரும் பாலை மட்டுமே குடிக்க முன்வர வேண்டும். நாட்டுப் பசுவின் பாலுக்கு சந்தையில் நல்ல வரவேற்பும், மதிப்பும் உள்ளது. பாலில் இருந்து பணம் கிடைக்கவில்லை என்றால், அதை நெய்யாக மாற்றி விற்பனை செய்யுங்கள் என்றார்.
தொழில்நுட்பத்தை புரிந்துகொண்டு சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்’_
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஆலங்குடி பெருமாள் பேசியதாவது:
1998-ல் ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 2 கிலோ விதைநெல் மட்டுமே பயன்படுத்தினேன். இடைவெளி அதிகம்விட்டு நாற்று நட்டதால் விளைச்சல் அதிகம் கிடைத்தது. ஆனால், வேளாண் அதிகாரிகளே இதை நம்பவில்லை. இதுபற்றி 2002-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு கடிதம் எழுதினேன். அவரது உத்தரவின்பேரில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வேளாண் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது ஏக்கருக்கு அரைகிலோ விதை நெல் மட்டும் பயன்படுத்தி 2,400 கிலோ நெல் மகசூல் எடுத்தேன். இதைக்கண்டு வியந்த நம்மாழ்வார் எனக்கு விருது வழங்கினார்.
அதற்குபிறகு 2010-ல் 3 சென்ட் நிலத்தில் 300 கிராம் விதை நெல்லை தூவினேன். அதிலிருந்து 3,750 கிலோ எடையளவுக்கு மகசூல் கிடைத்தது.
நம்மாழ்வாரின் வழிகாட்டுதலால் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். நல்ல மகசூல் கிடைக்கிறது என்றார்._
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதது இயற்கை விவசாயம்’_
மதுரையைச் சேர்ந்த இயற்கை வேளாண் வல்லுநர் பாமயன் பேசியதாவது:
இந்தியாவில் விவசாயம் தொன்மையான தொழில். 1860-ல் ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்திய விவசாயத்தின் தொழில்நுட்பம் குறித்து அறிய ஒரு குழு அமைத்தனர். அந்த குழு தனது ஆய்வறிக்கையில் தென்னிந்திய விவசாயிகள் விவசாயத்தில் சிறந்த தொழில்நுட்பங்களை தெரிந்து வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளது. நம் மீது ரசாயன உரம் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது. ரசாயன உரங்கள், ரசாயன களைக்கொல்லி, பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதால் ஏற்படும் பின்விளைவுகள் மோசமானது.
இயற்கை விவசாயம் தற்சார்புடையது, மறுசுழற்சிக்கு ஏற்றது. மோசமான பின்விளைவுகளை உருவாக்காதது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதது. இதனால்தான் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
பாரம்பரிய இயற்கை விவசாயத்துக்கு குறைவான தண்ணீர் போதும். அதிக உடல் உழைப்பு தேவையில்லை.
ரசாயன உரத்துக்கு அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது. அதுபோல இயற்கை உரங்களுக்கும் மானியம் வழங்க வேண்டும். அதனால் இயற்கை வேளாண் பொருட்களின் விலையும் கணிசமாகக் குறையும். மிக அதிக எண்ணிக்கையில் நடுத்தர மக்கள் இயற்கை வேளாண் பொருட்களை பயன்படுத்தி பலனடைய இது உதவும்என்றார்._
பாரம்பரிய விதை நெல் அனைத்து விவசாயியையும் சென்றடைய வேண்டும்’_
நமது நெல்லைக் காப்போம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் இரா.ஜெயராமன் பேசியதாவது:
இயற்கை வேளாண் பொருட்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு நாங்கள் குறைந்த விலையில் பாரம்பரிய விதைநெல் வகைகளை வழங்குகிறோம். ஒரு நிபந்தனை, அவர்கள் எங்களிடம் வாங்கிய பாரம்பரிய விதைநெல்லை 2 மடங்காகத் திருப்பித் தர வேண்டும்.
ஏனெனில், பாரம்பரிய விதைநெல் வகைகளைப் பரவலாக அனைத்து விவசாயிகளிடமும் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிபந்தனை. முதலில் 7 விதமான பாரம்பரிய ரக நெல்களை சேகரித்த நாங்கள் இப்போது 150 ரக பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்துள்ளோம்.
நமது முன்னோர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை விட்டுச் சென்றுள்ளனர். அவற்றை மீட்டெடுக்க வேண்டும். 165 ரக நெல் வகைகள் மருத்துவ குணங்கள் கொண்டவை. பூங்கார் ரக அரிசி மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு உடல் வலிமையும் ஆரோக்கியமும் தரக்கூடியது. கர்ப்ப காலத்தில் இந்த அரிசியால் சாதம் சமைத்தோ, கஞ்சி வைத்தோ சாப்பிட்டு வந்தால் சிசேரியன் என்பதற்கே இடமிருக்காது.
மாப்பிள்ளை சம்பா போன்ற ரகங்கள் கொஞ்சம் மோட்டா ரகமாக இருக்கிறது என்று கருதுவோர், சன்ன ரகமான இலுப்பைப் பூ சம்பா அரிசியை எடுத்துக் கொள்ளலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் இந்த இலுப்பைப் பூ சம்பா அரிசியால் சாதம் சமைத்து 2 நாட்கள் சாப்பிட்டு ஓய்வெடுத்தால் உடல் நலமடையும். கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி பாலீஷ் செய்யப்பட்டவை. இதில் ஒரு சத்தும் கிடையாது. பாரம்பரிய முறை விவசாயத்தில் செலவு குறைவு, நஷ்டத்துக்கு இடமில்லை. ஒவ்வொரு விவசாயியும் தன்னிடமுள்ள நிலத்தில் பாதியில் இயற்கை விவசாயம் செய்யமுன்வர வேண்டும். அதில் வெற்றி பெற்றால் எல்லா நிலங்களிலும் இயற்கை வேளாண்மையை தொடருங்கள் என்றார்._

Source: தி இந்து-

No comments:

Post a Comment