Monday, March 7, 2016

உழவாலயம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா


பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் உழவாலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் கே.செல்லமுத்து தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.திருநாவுக்கரசு, மாநிலப் பொருளாளர் ஈ.பாலசுப்பிரமணியம், ஆலோசகர் கே.சி.எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் வாவிபாளையம் சோமசுந்தரம் வரவேற்றார்.
விழாவில் உலக நலன் கருதி 108 கோமாதா பூஜை, உழவர் வளம் காண 108 யாக வேள்வி ஆகியவை நடைபெற்றது. இதை கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் உலக சமாதான தெய்வீகப் பேரவையின் வேள்விக் குழுவினர் நடத்தினர். உழவாலயம் அமைப்பதற்கான அடிக்கலை கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையின் தலைவர் நல்ல ஜி. பழனிசாமி, சூலூர் ஆர்.வி.எஸ்.குழுமத்தின் தலைவர் கே.வி.குப்புசாமி ஆகியோர் நட்டு வைத்தனர்.
இதுகுறித்து உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் கே.செல்லமுத்து கூறியதாவது:
இந்த உழவாலயத்தில் 500 பேர் அமரக் கூடிய அளவில் கூட்ட அரங்கம், மழை, வெயில், விளை பொருள்களிள் விலை நிலவரங்ரகளை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் இண்டர்நெட் வசதியுடன் கூடிய தகவல் மையம், வேலை வாய்ப்பு, திருமண தகவல் மையம் ஆகியவை அமைக்கப்படவுள்ளது. மேலும், விவசாயிகளின் பிள்ளைகள் உயர் கல்வி பயில சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஆகியவையும் இங்கு நடத்தப்படும் என்றார். இவ்விழாவில், ராஜரீகா எழுதிய "இயற்கை உரம் இறவா வரம்' என்னும் நூல் வெளியிடப்பட்டது.
பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், பழனி சாது சண்முக அடிகளார், முத்து சிவராமசாமி அடிகளார், பழனிசாமி அடிகளார் ஆகியோர் அருளுரை நிகழ்த்தினர்.
இதில், முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பாஜக மாவட்டத் தலைவர் எஸ்.டி. மோகன் மந்திராசலம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வி.எஸ்.சி.மனோகரன், ஆடிட்டர் பாலு, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் என்.எஸ்.பழனிசாமி, மருத்துவர் சிவசாமி உள்பட பலர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரமூர்த்தி, கோவை மாவட்டச் செயலாளர் எஸ்.எல்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் நன்றி கூறினர்.


Source : Dinamani

No comments:

Post a Comment