இஞ்சி நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அதே நேரத்தில் அது மிகச் சிறந்த மருந்தாகவும் பயன் தருகிறது. இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி அதை தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் பித்தத்தால் ஏற்படும் கோளாறுகளை தணிக்கலாம். பித்தத்தை கட்டுப்படுத்துவதில் இஞ்சி மிகச் சிறப்பாக செயல்படுகிறது. இஞ்சியை பயன்படுத்தி நாம் காலை அருந்தும் தேநீர் ஒன்றை தயார் செய்யலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் புதினா இலை, இஞ்சி, பனங்கற்கண்டு. காய்ச்சிய பால். சிறிது புதினா இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு இஞ்சி துண்டுகளை நசுக்கி அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். இதனுடன் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொண்டு இதனுடன் பால் சேர்த்துக் கொள்ளலாம். பால் சேர்க்காமலும் இதை பருகலாம்.
வாரம் இரு முறையாவது இந்த தேநீரை எடுத்துக் கொள்வதன் மூலம் இஞ்சியின் பயன்களை நாம் பெறலாம். இஞ்சி உடலுக்கு உஷ்ணத்தை தரக் கூடிய உணவாகும். வயிற்று பொருமல், வயிற்று உப்புசம் ஆகிய கோளாறுகளை போக்கக் கூடிய மருந்தாக இஞ்சி விளங்குகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து அதனால் இதய வலி ஏற்படுதல், மூட்டுகளில் வலி ஏற்படுதல், இதய அடைப்பு ஏற்படுதல் போன்றவற்றை உருவாக்கும் கொழுப்பு சத்தை கரைக்கக் கூடிய தன்மை இஞ்சிக்கு உள்ளது.
இதனால் இதய நோய் வராமல் இஞ்சி தடுக்கிறது. மேலும் செரிமானத்தை அளிக்கக் கூடியதாகவும் இஞ்சி விளங்குகிறது. ரத்த ஓட்டத்தை தூண்டக் கூடியது. சுறுசுறுப்பை தரக் கூடியது.இதை பருகுவதன் மூலம் உடலுக்கு புத்துணர்வு ஏற்படுகிறது. இஞ்சியை பயன்படுத்தி தொண்டை புண், தொண்டை வலிக்கான மருந்தை தயார் செய்யலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் இஞ்சி துண்டுகள், இலவங்க பட்டை, மிளகு பொடி, தேன். சிறிதளவு இஞ்சி துண்டுகளை எடுத்துக் கொண்டு அதனுடன் இரண்டு துண்டு லவங்க பட்டையை சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிது மிளகு பொடியை சேர்க்க வேண்டும். இதனுடன் கொஞ்சம் நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
இதை வடிகட்டி எடுத்துக் கொண்டு இதனுடன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தொண்டை புண், வலி இருக்கும் போது இதை எடுத்துக் கொள்வதால் மிகுந்த பயனை தருகிறது. இஞ்சி ஒரு வலி நிவாரணியாக பயன் தருகிறது. நீண்ட நாளாக மூட்டுவலியை ஏற்படுத்தும் காய்ச்சல், முடக்கு வாதத்தை ஏற்படுத்தும் பிரச்னை தீர்க்க இந்த தேநீரை குடிப்பதால் மூட்டு வலி தீர்கிறது. உடலுக்கு வன்மையை தரும்.
Source : dinakaran
No comments:
Post a Comment