தக்காளியில் இலைத் துளைப்பான் பிரச்னை, நுண்காய் துளைப்பான் பிரச்னை அதிகளவில் உள்ளது.
ஆப்ரிக்காவில் இருந்து சமீபகாலமாக தமிழகத்திற்கு வந்தது இப்பிரச்னை. முதன்முதலில் ஓசூரில் இந்நோய் கண்டறியப்பட்டது. அடுத்து தர்மபுரி, கிருஷ்ணகிரியைத் தாக்கியதோடு மதுரை, திண்டுக்கல் பகுதி தக்காளி விவசாயத்தையும் அதிகமாக பாதிக்கிறது. மதுரை, திண்டுக்கல்லில் தக்காளி சாகுபடி அதிகம் என்பதால் பிரச்னையும் தீவிரமாக உள்ளது.
ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, அழகர்கோவில், தாதைய கவுண்டன்பட்டி, வாடிப்பட்டி, கெங்குவார் பட்டியைச் சுற்றி நோய்த்தாக்குதல் இருப்பதை விவசாயக் கல்லுாரி பூச்சியியல் துறை ஆய்வு செய்தது. இலைசுரங்கப்புழுவானது இலையின் நடுவில் நெளிந்து நுழைந்திருக்கும். நுண்காய் துளைப்பான் பூச்சியானது காயில் ஓட்டையிடும். இதனால் காய்கள் உதிர்ந்து அழுகிவிடும். இது புதியவகை பூச்சி என்பதை விவசாயிகள் உணராமல் பழைய நோய்க்குள்ள மருந்தை தெளிக்கின்றனர். இது வெற்றியைத் தராது.
தக்காளியில் இலை, காய்களில் இந்த அடையாளத்தை பார்த்தால் இனக்கவர்ச்சி பொறி வைத்து பூச்சிகள் விழுகிறதா என்று பார்க்க வேண்டும். மஞ்சள் ஒட்டுப்பொறி வைத்தால் பூச்சிகள் விழுந்து சாகும். இவை இரண்டும் வைப்பதற்கு ஏக்கருக்கு ரூ.100 தான் செலவாகும். பூச்சிகளை கண்காணித்து அவற்றின் எண்ணிக்கையை வைத்தே பயிர் பாதுகாப்பு செய்ய முடியும். அது இல்லாமல் மருந்து தெளிக்கக்கூடாது. அதில் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அடுத்த கட்டுப்பாட்டுக்கு முயற்சி செய்ய வேண்டும்.
வேப்பெண்ணெய், புங்கை எண்ணெய், வசம்பு கரைசல் போன்ற இயற்கை முறைகளை கையாள வேண்டும். இதில் ஒன்றிரண்டு நாட்கள் தாமதமாகலாம். அதிலும் கட்டுப்படி ஆகாவிட்டால் லிட்டருக்கு 0.5 மில்லி கிராம் 'இமிடோகுளோபிரிட்' கலந்து தெளிக்கலாம். மதுரை விவசாய கல்லுாரி பூச்சியியல் துறைக்கு பூச்சிகளின் மாதிரிகளை பாலிதீன் பையில் கொண்டு வரவேண்டும். அப்போது தான் சேதத்தின் மதிப்பை கணக்கிட்டு பயிர் பாதுகாப்பு செய்யலாம். இனக்கவர்ச்சி பொறி, தாவர பூச்சிக்கொல்லி என ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாளவேண்டும்.
நுகர்வோருக்கு தேவை: உணவுப்பொருளை அழகுப்பொருளாக பார்க்கும் கலாசாரம் நம்மிடம் பெருகிவிட்டதே பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகமாக காரணம். கண்ணாடி போல பளபளப்பாக காய்கறிகள் வேண்டும் என நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர். விஷமில்லாத நல்ல தரமான காய்கறி எனில் சொத்தை, சொரி இருக்கத் தான் செய்யும். கத்தரிக்காய், தக்காளியில் சொத்தை இருந்தால் பாதியை வெட்டி விடலாம். கொய்யாக்காயில் லேசாக சொரி இருந்தால் அதை சாப்பிடுவதால் உயிருக்கு ஆபத்தில்லை. காய்கறிகள் உருவாக்கப்படுவதில்லை; தானாக உருமாற்றம் பெறுகிறது. நுகர்வோர் இவற்றை வாங்க மறுப்பதால் தான் விவசாயிகள் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இந்த காய்கறிகளை சாப்பிடுவது தான் நமக்கு ஆபத்து என்பதை நுகர்வோர் புரிந்து கொள்ள வேண்டும்.
-மா.கல்யாணசுந்தரம்
பூச்சியியல் துறைத்தலைவர் மதுரை விவசாய கல்லுாரி
0452 - 242 2956
Source : Dinamalar
.
.
No comments:
Post a Comment