கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் கோழிகளின் இறப்பைத் தடுக்க கோழி மனைகளைக் குளிர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அடுத்த நான்கு நாள்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் வறண்ட வானிலை தொடரும். கோடையின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படும். பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகள் ஒரு சேர உயர்ந்தும், காற்றின் வேகம் மிதமாகவும் காணப்படும்.
வானிலை கோடையின் உக்கிர வெளிப்பாட்டை உணர்த்துகிறது. கோழிகளுக்குத் தீவனமிடும் நேரத்தை மிகவும் கவனமாகப் பின்பற்ற வேண்டும். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையில் தீவனத்தைத் தவிர்த்து குளிர்ந்த குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக பிற்பகலில் 4 மணிக்கு மேல் 8 மணி வரையிலும் முட்டைக்கோழிகளுக்கு குளிர்ந்த நீர் கிடைக்குமாறு செய்வதால் வெப்ப அதிர்ச்சியால் கோழிகள் இரவு நேரங்களில் இறப்பது தவிர்க்கப்படும்.
கோடை மழை துவங்கி வெப்பம் குறையும் வரை கோழி மனைகள், குடிநீர்க் குழாய்கள் செயற்கை முறை நீர் தெளிப்பான் மற்றும் அடிக்கடி அதிக அழுத்தத்தில் நீரை வெளியேற்றுவது போன்ற முறைகள் மூலம் வெப்பமடையாமல் தடுக்கலாம்.
கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் கடந்த வாரம் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆகவே பண்ணையாளர்கள் தகுந்த கோடைகால பராமரிப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
Source : Dinamani
No comments:
Post a Comment