திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை வெயிலில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வழக்கத்தை விட 5 டிகிரி வெப்பம் உயர்ந்துள்ளதால், பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடைகளை வளர்க்கும் விவசாய பெருங்குடி மக்கள், கோழிப் பண்ணை, மாட்டுப் பண்ணை வைத்திருப்போர் தங்களது கால்நடைகளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், கறிக்கோழி வளர்ப்போர், முட்டைக்கோழியை வைத்து பராமரிக்கும் பண்ணையாளர்கள், நாட்டுக் கோழி வளர்ப்பவர்கள் அதற்கான தீவனத்தில் புரதச் சத்து அதிகமாக கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, அமினோ அமிலத்தின் விகிதாச்சாரம் மாறாமல் சரியாக கொடுப்பதுடன், தானிய சத்துக்களையும் குறைத்துக் கொடுக்க வேண்டும்.
அதிக எண்ணெய் சத்து மிகுந்த தீவனத்தை கோழிகளுக்கு கொடுத்து வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து கோழிகளை பாதுகாக்கலாம். வெயில் தாக்கத்தை குறைக்க குளிர்ந்த, சுத்தமான தண்ணீரை கோழிகளுக்கு தேவையான அளவுக்கு மேல் குடிக்க வைக்கலாம்.
மேலும், கோழிப்பண்ணையைச் சுற்றி கொட்டகையின் இருபுறமும் குளிர்ந்த தண்ணீரில் நனைந்த சாக்குப் பைகளை (சணல்) கட்டிவிடலாம். கொட்டகையில் மின்விசிறி அமைத்து வெயில் தாக்கத்தை குறைக்கலாம். கால்நடைகளை வெயில் நேரத்தில் சூரிய வெளிச்சம் படும்படியான இடங்களுக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காலை 10 முதல் மாலை 4 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதை தவிர்ப்பது நல்லது.
கீற்று கொட்டகையில் மாடுகளை தங்கவைப்பதுடன், நிழல்தரும் மரங்கள் நிறைந்த பகுதியில் மாடுகளை கட்டி வைக்கலாம். மாட்டுக் கொட்டகையில் மின்விசிறிகள் பொருத்துவதுடன், மாடுகளை நல்ல காற்றோட்டமுள்ள இடங்களில் கட்டி வைத்துப் பராமரிக்க வேண்டும்.
அதிமாக மூச்சுவாங்கும் கால்நடைகளுக்கும், வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கும் வெப்ப அயற்சியைத் தடுக்கும் மருந்துகள் கொடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மாடுகளை குளம், குட்டை, ஏரிகளில் உள்ள தண்ணீரை கால்நடைகளுக்குத் தெளித்து வெப்ப தாக்குதலைக் குறைக்கலாம். குளிர்ந்த தீவனப் பயிர்கள், திரவ உணவுகளைக் கொடுத்து கால்நடைகளை பாதுகாக்கலாம். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், கோழிப்பண்ணை வைத்திருப்போர், மாட்டுப் பண்ணை வைத்திருப்போர் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி தங்களது கால்நடைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
Source : dinamani
No comments:
Post a Comment