இரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்த இளநீர் பருக வேண்டுமென சித்த மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். கோடைகாலம் துவங்கியதுமே, அளவுக்கு அதிகமாக வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர அஞ்சுகின்றனர். கோடை வெப்பத்தால் உடல் உஷ்ணமடைந்து பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. கோடைகால சூட்டை தணிக்க மக்கள் பல்வேறு குளிர்பானங்களை அதிகளவு உட்கொள்கின்றனர்.
இது போன்ற குளிர்பானங்கள் உடல் வெப்பத்தை சமப்படுத்துவதற்கு பதிலாக நோய்வாய்ப்படுத்துகிறது. மேலும் ஏசி அறையில் இருந்தாலும் உடல் உஷ்ணமடையும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கோடை வெயிலில் இருந்து தப்பிக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் இளநீர் சரியான தேர்வு என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை சித்த மருத்துவர்கள் கூறுகையில், இளநீர் உடல்சூட்டை தணிப்பதற்கு ஏற்ற பானமாகும். இதில் புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரி, கால்சியம், இரும்புசத்து, தயமின், ரிபோபிளேவின், நியாசின் போன்றவை உள்ளன. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இளநீர் சரியான தேர்வாகும். இளநீரில் உள்ள பொட்டாசியம், எலக்ட்ரோலைட் குறைபாட்டை போக்கி வயிற்றுபோக்கை சரிசெய்ய உதவுகிறது.
இதில் உள்ள எதிர்ப்பு சக்தி வைரஸ் நோய் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக அமைகிறது. உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், குளிர்ச்சியை தருகிறது. கோடைக்கு ஏற்ற சத்தான பானம். வாதத்தை கட்டுப்படுத்துவதுடன், சிறுநீரக கற்கள் உருவாகுவதை கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கிறது. சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. இரத்தசோகை, உற்சாகமின்மைக்கு நிவாரணம் அளிக்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இருமல் நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
source : dinakaran
No comments:
Post a Comment