பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின் ஏ, பி சத்துக்கள் உள்ளன. இதில் பொட்டாசியம் மிகுதியாக இருக்கிறது. இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. நார்ச்சத்து மிக்கது. இரும்புச்சத்து மிக்க கத்தரிக்காய் பெருங்குடலில் புற்றுவராமல் தடுக்கிறது. தூக்கமின்மையை போக்கும் மருந்தாக விளங்குகிறது. கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி வேகவைத்து பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும்.
நன்றாக கலக்கி சாப்பிட்டு வர தூக்கம் நன்றாக வரும். உணவுக்காக பயன்படும் கத்தரிக்காய் மருந்தாகிறது. சளி, இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் பசை, மிளகு பொடி, சீரகப் பொடி, நெய். ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விடவும். நெய் உருகியதும் ஒரு ஸ்பூன் கத்தரிக்காய் பசையை போட்டு வதக்கவும். சிறிது சீரகப் பொடி, மிளகுப் பொடி சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சளி, இருமல் பிரச்னை சரியாகும்.
கத்தரிக்காயில் கந்தகசத்து மிகுதியாக இருப்பதால் உடலுக்கு உஷ்ணத்தை தரும். ஒவ்வாமை நோய்களை போக்கும். ஈரலுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. மூச்சு முட்டுதல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கு கத்தரிக்காய் மருந்தாகிறது. கத்திரிக்காயில் பலவகை இருந்தாலும் நீல நிறம், நாட்டு கத்தரிக்காய் சமையலுக்கு நல்லது. விதையில்லாத, பிஞ்சு கத்தரிக்காயை பயன்படுத்தலாம்.கத்தரி வேர், இலைகளை பயன்படுத்தி சிறுநீர் கடுப்புக்கான மருந்து தயாரிக்கலாம்.
கத்தரி இலைகளில் உள்ள முட்களை நீக்கிவிட்டு சுத்தப்படுத்தி ஒருபிடி எடுக்கவும். இதனுடன் சீரகப் பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர் பெருக்கியாகிறது. கைகால், வயிறு வீக்கம் சரியாகும். 50 முதல் 100 மில்லி வரை காலை, மாலை குடிக்கலாம்.மருந்துக்கு பிஞ்சு கத்தரிக்காய் நல்லது. இதன் இலைகள், வேர்கள் மருத்துவ குணங்கள் உடையது.
இதயத்துக்கு நல்லது. நுரையீரல், சிறுநீரக கோளாறுகளை போக்கும். சீரண உறுப்புகளுக்கு நல்லது. மலச்சிக்கலை போக்குகிறது. இலைகள் சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. தோல் வியாதி உள்ளவர்கள் கத்தரிக்காயை குறைவாக பயன்படுத்த வேண்டும். இவர்கள் பிஞ்சு கத்தரிக்காய் சாப்பிடுவது நல்லது.கத்தரி வேரை பயன்படுத்தி உடல் வலி, கைகால் வலிக்கான மருந்த தயாரிக்கலாம்.
வேரை சுத்தப்படுத்தி 10 கிராம் வரை எடுக்கவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர உடல் வலி குணமாகும். வாயு பெருக்கம், ஈரத்தினால் ஏற்படும் நோய்களை தடுக்கிறது. வாத நோய்களை சரிசெய்கிறது. கத்தரிக்காய் இதயத்தை பாதிக்கும் கொழுப்புசத்தை தடுக்கிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
source : dinakaran
No comments:
Post a Comment