ஆண்டுக்கு மூன்று மாதம் வெயில் கொளுத்தும். தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் தலை சூடு, உடல் உஷ்ணமாவது, வியர்குரு போன்றவை ஏற்படுகிறது. வெயிலில் நடப்பதால் களைப்பு ஏற்படுகிறது. வெயிலின் தாக்கத்தினால் வியர்வை அதிகமாக வெளியேறுகிறது. உப்புசத்து வெளியாவதால் உடலில் கற்றாழை நாற்றம் அடிக்கிறது. எனவே, உடலை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வெயிலில் இருந்து உடலை பாதுகாக்கும் குளியல் முறைகள் குறித்து பார்ப்போம்.
தண்ணீரில் எலுமிச்சை சாறை கலந்து குளித்தால், வியர்வை நாற்றம் இல்லாமல் இருக்கும். உடலில் இருந்து வியர்வை வெளியாவது குறைகிறது. உடலும் குளிர்ச்சி அடைகிறது.வெட்டி வேரை குளிக்கும் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளித்தால் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம் இருக்காது.
உடல் உஷ்ணம் தணியும். நறுமணத்தை தரக்கூடியதாகிறது. சருமத்தை பாதுகாக்கும் குளியல் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அருகம்புல், மஞ்சள், நல்லெண்ணெய். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றவும். இதனுடன் அருகம்புல் சாறு, மஞ்சள் சேர்ந்த கலவையை சேர்க்கவும். இதை தைலப்பதத்தில் காய்ச்சி ஆற வைத்து வடிகட்டி எடுக்கவும். இந்த தைலத்தை வாரம் ஒரு முறையாவது உபயோகிக்கலாம்.
குளியலுக்கு முன்பு இதை பயன்படுத்துவதால் வெயிலில் செல்லும்போது தோல் பாதிக்காது. பொடுகு பிரச்னை சரியாகும். தலைமுடி கொட்டுவது நிற்கும். மூளைக்கு குளிர்ச்சி தரும். சனி நீராடுவது நன்மை தரும். வாரம்தோறும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. வெயில் காலத்தை சமாளிக்கும் குளியல் பவுடர் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பச்சரிசி, கடலை பருப்பு, பச்சை பயிறு, வெட்டி வேர், எலுமிச்சம் பழத்தோல், அருகம்புல், கஸ்தூரி மஞ்சள், துளசி அல்லது வேப்பில்லை.எலுமிச்சம் பழம், அருகம்புல், துளசி ஆகியவற்றை வெயிலில் காயவைத்து எடுக்கவும். இதனுடன் மேற்கண்ட பொருட்களை சேர்த்து பொடி செய்து எடுக்கவும். இந்த பொடியை வெயில் காலத்தில் சோப்புக்கு பதிலாக பயன்படுத்தலாம். இதை தேய்த்து குளித்து வர உடல் தூய்மையாவதுடன் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
வேர்குரு இல்லாமல் போகிறது. இந்த பொடியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம். அம்மை, வியர்குரு போன்றவற்றை வராமல் உடலை பாதுகாக்கலாம். கோடை காலத்தில் வியர்வை நாற்றம், உடல் உஷ்ணத்தை போக்குவதும், தோல், தலைமுடி ஆரோக்கியமாக இருக்க மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் உடல் ஆரோக்கியம் அடையும்.
Source : Dinakaran
No comments:
Post a Comment