Friday, April 22, 2016

வளர வேண்டிய உயர் தொழில்...

ஒரு நாடு வளமான நாடு என்பதன் அடையாளமே அந்த நாட்டில் மற்ற துறைகளைவிட உணவு உற்பத்தியில் எப்படி உள்ளது என்பதைப் பொறுத்தே அமையும். அதனால்தான் வான்புகழ் வள்ளுவரும் விவசாயத்தின் தனித்துவம் கருதி, 
 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; 
 அதனால் உழந்தும் உழவே தலை.
 - என்றார். உலகம் சுழன்று சுழன்று பல தொழில்கள் செய்தாலும் அவை அனைத்தும் ஏர்த் தொழிலின் உயர்வை நம்பியே நடக்கிறது. அதனால் விவசாயத்தில் எவ்வளவு துன்பங்கள் நேர்ந்தாலும் அனைத்து தொழிலுக்கும் தலைமைத் தொழில் விவசாயமே என்று கூறுகிறார்.
 ஆனால், துணைக்கண்டம் முழுவதுமே விவசாயமும் விவசாயிகளும் ஒரு தேக்க நிலையிலும், தண்டிக்கப்பட்ட நிலையிலும் திக்கற்ற நிலையிலுமே உள்ளனர்.
 நம் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் விவசாயத் துறையின் நிலை குழப்பமாகவே உள்ளது. அதனால் அனைத்தும் குழப்பமாகி நாட்டின் வளர்ச்சியே தேக்கமடைந்துள்ளது. இந்தியாவில் நமக்கு இருக்கும் வாய்ப்பு நம்முடைய விவசாய நிலங்களும், அது சார்ந்த இயற்கை வளங்களுமே ஆகும். அதை சரிவர பராமரிக்காவிட்டால் அனைத்து வாய்ப்புகளையும் இழந்தவர்களாகிவிடுவோம். 
 ஏனெனில், இப்படியே விவசாயம் சென்றால் எதிர்காலத்தில் உணவிற்காக பிற நாடுகளிடம் கையேந்தும் நிலையும், தண்ணீர்ப் பற்றாக்குறை, சுகாதாரச் சீர்கேடு, வறுமை, சுற்றுச்சூழல் பாதிப்படைதல், அதன் காரணமாக இந்தியத் துணைக் கண்டம் வெப்பமடைதல், அதனால் வரும் இயற்கைப் பேரிடர்களால் நாம் பெரும்பாதிப்பு அடையும் நிலையும் வரலாம். எதிர்காலத்தில் மிக் பெரும் பிரச்னைகளாக இருக்கப் போவது இவைகளேயாகும். இவை அத்தனையையும் விவசாய உற்பத்தி மூலம் சரிசெய்து விடலாம்.
 யாரோ விவசாயத்தில் கஷ்டப்படுகிறார்கள், எப்படியோ விவசாயம் நடக்கிறது, உணவு உற்பத்தியாகிறது என்ற நிலைமாற வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் விவசாயத்திற்கு என தனி பட்ஜெட், விவசாயம் நடக்க உகந்த சூழ்நிலைகளை தாலுகா வாரியாக உருவாக்க வேண்டும்.
 இன்று போட்டியற்ற தொழிலாக விளங்குவதும், வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளதும் விவசாயமே. மற்ற தொழில்கள் அனைத்திலும் கடும் போட்டி நிலவுகிறது. படித்தவர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதன் மூலம் அந்த தொழில் மீதும் அனைவருக்கும் ஈடுபாட்டையும் மேலும் அதிக அளவில் விஞ்ஞான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியையும் அதிக அளவில் பெருக்க முடியும்.
 எல்லோரும் படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும், மருத்துவராக வேண்டும், பொறியாளராக வேண்டும், தொழில் செய்ய வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும் என்று சொல்கிறார்களே தவிர, விவசாயம் செய்ய வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை. அப்படியானால், விவசாயம் யார்தான் செய்வது? பிற தொழில்களுக்கு இருக்கும் மரியாதை விவசாயத்திற்கு இல்லாத நிலையே உள்ளது.
 ஊடகங்கள், பத்திரிகைகளிலும் சமூக பிரச்னைகள், அரசியல், தொழில் பற்றிய விவாதங்கள் செய்வது போல் விவசாயம் பற்றிய கருத்தரங்குகள் நடைபெறுவதில்லை. இங்கிலாந்து போன்ற நாடுகளில் ராணுவப் பணிகளில் ஒரு குறிப்பிட்ட காலம் அனைவரும் ஈடுபடுவது போல நம் நாட்டில் அனைவரும் விவசாயத்தில் ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்ய வேண்டும்.
 இனி விவசாயம் செழிக்க வேண்டும் எனில் தற்போதைய உலகச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நம்முடைய விவசாயக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். நவீன இயந்திர முறை விவசாயம் உருவாக வேண்டும். மிகப் பெரும் வணிகக்கூட்டாண்மை நிறுவனங்கள் விவசாயத்தில் குறிப்பிட்ட அளவு பங்களிப்புச் செய்ய வேண்டும். சிறு சிறு நிலங்களை இணைத்து கூட்டுப் பண்ணைகளை உருவாக்க வேண்டும். 
 நம் உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கே அதிக அளவில் இருப்பது போன்றும், நமது ஏற்றுமதியில் மற்றவற்றைவிட அதிக அளவில் விவசாயப் பொருள்களையும், இறக்குமதியில் குறைந்த அளவில் விவசாயப் பொருள்களையும் இறக்குமதி செய்யும் வகையில் விவசாயம் நிலைநிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நாடும் நலம் பெறும். விவசாயிகளின் நிலையும் வளமாகும்.
 விவசாயிகளின் வருத்தமும், கண்ணீரும் நாட்டின் சாபக்கேடாகும். உலக அளவில் நாம் பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாக உருவாக வேண்டும் எனில், பிற நாடுகள் பிற விஷயங்களில் கவனம் செலுத்துகின்ற நிலையில் நாம் வித்தியாசமாக, மாறுபட்ட அணுகுமுறையாக விவசாயத்தில் கவனம் செலுத்தி அதிக உற்பத்தி, அதிக ஏற்றுமதி, அளவற்ற அன்னிய செலவாணி என்று உருவாக்கலாம். நாம் பொருளாதார பலம் கொண்ட வல்லரசு என்ற நிலையை எளிதில் அடையலாம்.
 இனி விவசாயத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களாக விவசாயம் செய்பவர்களுக்கு மரியாதையையும், கெளரவத்தையும் உருவாக்க வேண்டும். விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும், எல்லா வேலைகளுக்கும் ஆள்கள் கிடைக்கிறார்கள். ஆனால், விவசாயத்திற்கு மட்டும் ஆள்கள் கிடைப்பதில்லை. 
 எனவே, விவசாயம் செய்வதற்குத் தேவையான பணியாளர்களை உருவாக்குதல், அவர்களுக்குத் தேவையான பயிற்சியை அளித்தல், அந்த தொழில் மீது அவர்களுக்கு ஈர்ப்பை உருவாக்குதல், அவர்களுக்குச் சரியான ஊதியம் கிடைக்க வழி செய்தல் போன்றவற்றை கவனிப்பதற்கு அரசு ஊழியர்களை உருவாக்க வேண்டும். அது சார்ந்த அலுவலகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
 விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்கள் சிலவற்றிற்கு அதிக விலையும், சிலவற்றிற்கு உற்பத்தி செலவுகூட கிடைக்காத வகையிலும் உள்ளது. அதை மாற்றும் வகையில், தற்போதைக்கு எந்தப் பயிர் அதிகத் தேவை, எந்தப் பயிர் தேவைக் குறைவு, ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ளவை எவை என்பதையும் அவ்வப்போது விவசாயிகளுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும். சமச்சீராக அனைத்து பயிர்களையும் உற்பத்தி செய்ய வழி காணவேண்டும்.
 மேலும், விளையும் பொருள்களை சேதமின்றி பதப்படுத்த சேமிப்புக் கிடங்குகள் தாலுகா வாரியாக உருவாக்கப்பட வேண்டும். எந்தப் பகுதிகளில் எந்தப் பயிர் செழிப்பாக வளரும் என்பதையும், ஒவ்வொரு பயிருக்கும் தேவையான அந்த மண் வளத்துக்கு ஏற்ற வகையில் இயற்கை விவசாயத்தின் அடிப்படையில் மண் வளம் கெடாதவாறு உரம் இடும் முறையை கண்டறிதல் வேண்டும். மின் சேமிப்பு, நீர் சேமிப்பு ஏற்படும் விதமாக அனைத்து புன்செய் விளை நிலங்களும், மலைச்சரிவு நிலங்களும் நுண் நீர்ப் பாசன முறையைப் பெற வேண்டும்.
 மண்வளம் கெடாமல் இருக்க இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட வேண்டும். ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் போன்றவற்றால் மண்வளம் கெடாமல் விவசாயம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். எதைப் பற்றியும் யோசிக்காமல் விவசாயம் இயந்திர மயமாக்கப்பட வேண்டும்.
 மாணவர்களின் பாடப் புத்தகங்களில் விவசாயம் பற்றிய கருத்துகளை இளமையிலேயே பதிய வைக்க வேண்டும். தொலைக்காட்சிகளில் அனைவரும் பார்க்கும் நேரத்தில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி விவசாயம் பற்றி விவாதிக்கப்பட வேண்டும்.
 விவசாயம் இனி கிராமங்கள் மாத்திரம் இல்லாமல் நகரங்களில் நடைபெற வேண்டும். வீட்டின் மாடியில் காய்கறி வளர்ப்பு, வீட்டின் காலி இடங்கள் மற்றும் பொது இடங்களில் மரம் வளர்ப்பின் மூலம் கார்பன்-டை-ஆக்ûஸடு போன்ற நச்சு வாயுக்களை சமன் செய்தல், ஆக்சிஜன் உற்பத்தி, வெப்பமயமாதலைத் தடுத்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும்.
 மகாகவி பாரதி சொன்னது போல் "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்' என்பதற்கு இலக்கணமாக முக்கிய கலைச் செல்வமான விவசாயத்திற்கு வெளிநாடுகளில் உள்ள நமக்கு உபயோகமான வழிமுறைகளைக் கண்டறிந்து நம் நாட்டில் செயல்படுத்த வேண்டும். 
 விவசாயம் சார்ந்த துணைத் தொழில்கள் செழிப்புற வேண்டும். மரம் வளர்ப்பு, விவசாயம் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்களைக் கண்டறிந்து விவசாயத்தில் ஈடுபடுத்த வேண்டும்.
 வறுமையின் தாயகம் உணவுப் 
 பற்றாக்குறை;
 வன்முறையின் பிறப்பிடம் உணவுப் 
 பற்றாக்குறை;
 அமைதியின் இருப்பிடம் உணவு 
 உற்பத்தியில் தன் நிறைவு 
 }என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
 விவசாயிகள் கடந்த 50 ஆண்டுகளாக நாடு முழுவதும் எவ்வளவோ காயப்பட்டு இருக்கிறார்கள். சோதனைகளைத் தாங்கி இருக்கிறார்கள். இயற்கைச் சீற்றங்களினால் பாதிப்படைந்திருக்கிறார்கள்.
 இனியாவது அவர்கள் வாழ்வில் மாற்றம் வர வேண்டும். தற்போது விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் கொஞ்ச நஞ்சம் பேரின் மனதில் நம்பிக்கை குறையுமேயானால் இந்தியாவின் ஆரோக்கியம் கெட்டு உலக நாடுகளின் மத்தியில் தரம் தாழும் நிலை கண்டிப்பாக உருவாகும். இதுவரை விவசாயம் செய்து, உணவு உற்பத்தி செய்து, வயிற்றுப் பசி போக்கிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கமும், நன்றியும் சொல்வோம்.
 சுதந்திரம், இட ஒதுக்கீடு, சமூகப் பிரச்னைகளுக்கு ஒன்று சேர்ந்தது போல் அனைவரும் சேர்ந்து வீழ்ந்து கிடக்கும் விவசாயத்தைத் தூக்கி நிறுத்த சபதம் ஏற்போம். பூமியின் ஆரோக்கியமே எங்கும் பசுமையாக இருப்பதுதான் என்பதை நிலை நாட்டுவோம்.
 அனைத்துத் தொழில்களுக்கும் தாயாக இருப்பது விவசாயமே! பிற தொழில்கள் அனைத்தும் விவசாயம் என்ற தாய் ஈன்ற குழந்தைகளே! விவசாயத்தின் மீது அனைவருக்கும் கவனம் என்பது காலத்தின் கட்டாயம். காலத்தின் தேவை மட்டுமன்றி நம்முடைய முக்கிய கடமை அதுவே யாகும்.
 வாழ்க விவசாயம்! வளர்க விவசாயிகளின் பொருளாதாரம்!
 
 கட்டுரையாளர்:
 விவசாயி.

Source : Dinamani

No comments:

Post a Comment