புதுச்சேரி அருகே இயற்கை விவசாயம் மூலம் பீட்ரூட், கேரட், பீன்ஸ் சாகுபடி செய்து விவசாயிகள் சாதனை புரிந்து வருகின்றனர்.
விவசாய நிலங்களில் பயிர்களுக்காக ரசாயன உரம் பயன்படுத்தப்படுவதால், தற்போது அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் உணவுப் பொருள்களை உண்போருக்கு பல்வேறு நோய்த் தாக்குதல்கள் ஏற்படுகின்றன. மேலும் விவசாய நிலங்களும் பயனற்ற நிலைக்குப் போகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர்.
இவ்வாறு மாற விரும்பும் விவசாயிகளுக்கு புதுச்சேரி அடுத்த பிஎஸ். பாளையத்தில் செயல்படும் நம்மாழ்வார் இயற்கை உழவர் சங்கத்தின் தலைவரான வேணுகோபால் தலைமையிலான நிர்வாகிகள் உரிய பயிற்சியும், விவசாய முறைகளையும் கற்றுக்கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து அச்சசங்கத்தின் தலைவர் வேணுகோபால் கூறியது: புதுச்சேரியில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட விவசாயிகளிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. இயற்கை முறையில் நெல்லை மட்டும் நடவு செய்து வந்த விவசாயிகளிடம் சிறுதானியங்கள், காய்கறிகளை பயிர்செய்ய அறிவுறுத்தி வந்தோம். இதற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது.
விவசாயிகள் ஆர்வம்: புதுச்சேரியில் கலிதீர்த்தாள்குப்பம், பிஎஸ்.பாளையம், திருபுவனை பகுதியில் விவசாயிகள், குறைந்த செலவில் நல்ல மகசூல் அடைந்துள்ளனர். எங்கள் சங்கத்தில் 365 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இயற்கை விவசாயத்தையே செய்து வருகின்றனர். பாரம்பரிய முறையில் ரசாயன கலப்பில்லாத பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். மேலும் நுகர்வோரிடம் இயற்கை விவசாயத்தின் மீதான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. நச்சு கலப்பில்லாத உணவை பெற வேண்டும் என ஆர்வத்தில் எங்களைத்தேடி வந்து பொருள்களை வாங்கிச்செல்கின்றனர். இது எங்களது பயிர்களுக்கு நல்ல விலையை பெற்றுத்தருகிறது.
அரசு உரிய ஒத்துழைப்பு அளித்தால் புதுச்சேரியை நோயில்லாத மாநிலமாக மாற்ற எங்களால் முடியும். சிக்கிம் மாநிலம் இயற்கை விவசாயத்தில் மட்டுமே பயிர் செய்கிறது. அதேபோல புதுச்சேரியும் 2020இல் இயற்கை விவசாயம் மட்டும் செய்யும் மாநிலமாக மாற்றம் பெறும் என்றார்.
திருபுவனையைச் சேர்ந்த விவசாயி கஜேந்திரன் கூறியது: இயற்கை விவசாயத்தில் முதலில் நெல் மட்டும்தான் பயிரிட்டு வந்தோம். அதற்கு மண் புழு உரம், சாணம் ஆகியவற்றையே பயன்படுத்தினோம். நவீனரக நெற்பயிர்களை விட இயற்கை விவசாய நெல் உற்பத்திக்கு அதிக காலம் பிடித்தது. ஆனால் அதற்கேற்ப நல்ல விலை கிடைத்தது. தற்போது சிறுதானியங்களையும், கேரட், இன்சுலின் வெங்காயம், பீட்ரூட், நூக்கல், பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் இயற்கை முறையில் பயிர் செய்து வருகிறோம் என்றார்.
Source : dinamani
No comments:
Post a Comment