Friday, July 1, 2016

"விவசாயிகள் குழுவாக இணைந்து செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும்'

உற்பத்தி செய்யப்பட்ட வேளாண் பொருட்களை விவசாயிகள் குழுவாக இணைந்து விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றார் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ். சோமசுந்தரம்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மாங்காட்டில் பைந்தமிழ் உழவர் மன்றம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து, உழவர் மன்றத்தை தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது:
தற்போதைய விவசாய முறைகள் விவசாயிகளுக்கு லாபத்தை அதிகரிக்கும் வகையிலேயே உள்ளன. விவசாயிகளுக்கு சாகுபடி முறைகள், இடுபொருட்கள், கடனுதவி என பல்வேறு விதமான உதவிகளை அரசு செய்கிறது. எனவே, விவசாயிகள் ஒன்றிணைந்து குழுவாக செயல்பட வேண்டும்.
அந்தந்தப் பகுதி விவசாயிகள் ஒன்றுசேர்ந்து ஒரே விதமான பயிர்களை சாகுபடி செய்தால், அதை எளிதில் சந்தைப்படுத்துவதோடு, அதிக விலைக்கு விற்பனை செய்யவும் முடியும். கடினமாக உழைத்து பயிர் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், இறுதியில் வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் முழுமையாக அக்கறை காட்டுவதில்லை என்பதால் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.
நிகழ்ச்சியில், விருத்தி வேளாண் ஆலோசனை மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. நாராயணன், திருவரங்குளம் வேளாண் உதவி இயக்குநர் எம். சக்திவேல், அம்புலி ஆறு விவசாய உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் ஆர். சகுந்தலா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Source : Dinamani

No comments:

Post a Comment