Tuesday, July 12, 2016

நீர் தேவைக்கேற்ப பயிர் தேர்வு வேளாண் அதிகாரி வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் நீர் தேவைக்கேற்ப பயிர்களை தேர்வு செய்து விவசாயம் செய்ய வேண்டும் என குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் செல்வராஜ் கூறினார். சிவகங்கை அருகே குடஞ்சாடி கிராமத்தில் நீர்வடிப்பகுதிகளுக்கான விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது. சிவகங்கை வேளாண் உதவி இயக்குநர் தனபாலன் தலைமை வகித்தார். 

இதில் கலந்துகொண்டு செல்வராஜ் பேசியதாவது: சொட்டு நீர்ப்பாசன முறைகள், குறைந்த அளவு நீரைப்பயன்படுத்தி வளையும் சிறுதானியங்கள், பயறு வகை சாகுபடிகளில் விவசாயிகள் ஆர்வம் செலுத்த வேண்டும். நீர் தேவைக்கேற்ப பயிர்களை தேர்வு செய்தால் வறட்சியால் பாதிக்கப்படும் நிலை ஏற்படாது. இதுபோன்ற மாற்றுப்பயிர் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து விவசாயம் செய்ய வேண்டும் என்றார். 

பயிற்சியில் கோடை உழவின் முக்கியத்துவம், மழை நீர் சேகரிப்பு, பண்ணைக்குட்டை அமைப்பது, வரத்துக்கால்வாய் தூர் வாருதல், குளங்களில் நீர் சேமிப்பு, தெளிப்பு நீர் பாசன முறை உள்ளிட்டவை குறித்து பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர் ராஜா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் தம்பிதுரை, மேலாளர் காளீஸ்வரி உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.  

Source : Dinakaran

No comments:

Post a Comment