Wednesday, July 13, 2016

சிறுநீர் கட்டை உடைக்கும் புள்ளடி

1

ஞானமறிந்த தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
பானமதை யுண்டு பசியினால் ஞானமது
கண்டால் உடலுயிருங் காயம் வலுவாகும்
உண்டால் அமிர்த ரசம் ஊண்


புள்ளடி என்பது பார்ப்பதற்கு புல் போன்று காட்சியளித்தாலும் இது பூண்டு வகையைச் சார்ந்தது. இமயத்தின் அடிவாரத்திலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வளரும். இதில் புள்ளடி, சிறுபுள்ளடி என இருவகையுண்டு. நான்கு இலைகள் நான்கு இதழ்போன்றும் கிளைவிட்டு புல் போன்றும் காட்சியளிக்கும். மாந்தம், கணம், கழிச்சல், இவைகளை அடக்கும். பாலை சுரப்பிக்கும் வலியை போக்கும். தசமூல குடிநீரில் சேரும் சரக்குகளில் ஒன்றாகும்.

கடும் சுரத்தால் துன்பப்படுவோர்களுக்கு குடிநீராக்கி கொடுத்தால் சுரம் குறையும். குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் சில தாய்மார்களுக்கு பால் போதிய அளவு சுரக்காது. இவர்கள் சிறுபுள்ளடி இலையை கைப்பிடி அளவு எடுத்து மைய அரைத்து 200மிலி பசும்பாலி்ல் கலந்து வடிகட்டி இரவு படுக்கும் முன் குடிக்க தாய்ப்பால் பெருகும்.

பிறந்த குழந்தைகளுக்கு மாந்தம் ஏற்பட்டால் சிறுபுள்ளடியை பறித்து சுத்தம் செய்து இலையை ஆய்ந்து மைய அரைத்து வடிகட்டி கால் சங்களவு கொடுக்க மாந்தம் விலகும். நீண்ட நாட்கள் நோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்களுக்கு உடல் மெலியும். உடலில் ரத்தம் குறைவாகவும் இருப்பார்கள். இவர்கள் ஒரு கைப்பிடி அளவு புள்ளடி எடுத்து இரண்டு பாதாம் பருப்பு ஒரு தேக்கரண்டி கசகசா வைத்து மை அரைத்துக்கொள்ள வேண்டும்.

இதில் நெல்லிக்காய் அளவு காலை வேளையில் மட்டும் சாப்பிட வேண்டும். இதேபோல் 21 நாட்கள் சாப்பிட உடல் தேறும். உடலில் புதிய ரத்தம் உண்டாகும். உடலில் ஏற்படும் கட்டிகள் உடைந்து குணமாக, புள்ளடி இலையை மசிய அரைத்து சற்று தடிமனாக கட்டிகள் மீது போட்டு வந்தால் கட்டிகள் உடையும். தொடர்ந்து போட்டு வந்தால் புண்கள் ஆறும். சிறுபுள்ளடியை முழுமையாக எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் விடாமல் சிதைத்து சாறு பிழிந்து அதை நீண்ட நாட்கள் ஆறாத புண்கள் மீது பூசி வர விரைந்து ஆறும்.

சிறு புள்ளடியை கொண்டு வந்து இலையை எடுத்து சுத்தம் செய்து கைப்பிடி அளவு எடுத்து 300மிலி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 150மிலியாக சுண்டியதும் குடித்து வந்தால் பசியை தூண்டும். அதிகாலை வெறும் வயிற்றில் 300மிலி குடித்தால் நீர்க்கட்டு உடைந்து சிறுநீர் பிரியும். இதில் காலை மாலை 100மிலி வீதம் குடித்து வந்தால் உடலின் வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் நீங்கும். உடலுக்கு வன்மை கொடுக்கும்.

மாந்தகணம் போராமல் வன்மந்தம் நீங்கிவிடும்
ஓய்ந்தமுலைப் பாலும் ஓழுகுங்கள் மோந்தே
சிறுபுள் ளடிதுதையாத் தேமலர்ப்பூங் கோதாய்
சிறுபுள் ளடியைநிதஞ் சேர்


என்கின்றார் அகத்தியா பெருமான். புள்ளடி தானே பூண்டு செடிதானே என இருந்திடாமல் அதனை ஆராய்ந்து அதன் மருத்துவபயனை அறிந்தார்கள் நமது முன்னோர்கள். அவர்கள் சொன்ன வழியில் முறையாக தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.

Source : Dinakaran

No comments:

Post a Comment