Monday, March 7, 2016

விவசாயிகளுக்கும், அடித்தட்டு மக்களுக்குமான பட்ஜெட்:தொழில் வர்த்தக சங்க கூட்டத்தில் தகவல்


விவசாயிகளுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் 2016-17 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விளக்கக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் தலைமை வகித்தார். இதில் பட்டயக் கணக்காளர் ஜி.ராமசாமி பேசியதாவது:
இந்த பட்ஜெட்டில் ரூ.97 ஆயிரம் கோடி போக்குவரத்து துறை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.38 ஆயிரம் கோடி விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை அறிவிக்கப்பட்ட பட்ஜெட்களிலேயே விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது இந்த பட்ஜெட்டில் தான். கிராம வளர்ச்சிக்கும் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிவிப்புகளால் விவசாயிகளும், கிராமப்புற மக்களும் பயனடைய வாய்ப்புள்ளது. ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகையை பார்க்கும்போது இது சீரான வளர்ச்சியை அளிக்கும் பிரமாண்டமான பட்ஜெட் எனத் தெரிகிறது.
இந்தத் திட்டங்களுக்கான தொகையை பொதுநிறுவனப் பங்குகளை விற்பதன் மூலமும், வெளிநாட்டு நிறுவன முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமும் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தனி நபர் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.4 லட்சமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தப் பட்ஜெட்டிலும் ஏற்கப்படவில்லை. தனி நபர் வருமான வரிவிலக்கு வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து இரண்டரை லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மூத்தக் குடிமக்களுக்கும் வரி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் உதவியுடன் வருமான வரித்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ரூ.10 லட்சத்துக்கும் மேல் வங்கியில் சேமிப்பு வைத்திருப்பவர்கள் விபரம், ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக சொத்துக்கள் வாங்குவோர் விவரம் ஆகியவை வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தப்படும். இதனால் வருமான வரி செலுத்தாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும். இந்தப் பட்ஜெட்டில் புதிதாக டிசிஎஸ் எனப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக பொருட்கள் வாங்கும் நபர்களிடம் இருந்து 1 சதவீத வட்டியை சம்பந்தப்பட்ட நிறுவனம் வசூலித்து அரசிடம் செலுத்தும். மேற்கூறிய அம்சங்களை கணக்கில் கொள்ளும்போது இது விவசாயத்தையும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையிலான பட்ஜெட் என்றார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேலு, இணைச் செயலர் ஜெ.செல்வம், பொருளாளர் டி.எஸ்.ஜீயர் பாபு, பட்டயக் கணக்காளர்கள் வி.அழகப்பன், எம்.சுப்பையா, எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Source : Dinamani

No comments:

Post a Comment