உத்தமபாளையம்: திராட்சை பழங்களில் ஏற்படும் வெடிப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்ர தொழில்நுட்பத்தை ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.அதன் தலைவர் பேராசிரியர் பார்த்திபன், உதவி பேராசிரியர் சுப்பையா கூறியிருப்பதாவது : கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்யப்படும் திராட்சையில் செவட்டை நோய், பழம் வெடித்தல் போன்ற பிரச்னைகள்ஏற்பட்டு விவசாயிகளை பாதிப்படையச் செய்கிறது. இந்த பிரச்னைகளில் இருந்து விவசாயிகள் விடுபட முதலில் வேர்க்குச்சிகளை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஜனவரி மாதமும் நடவு செய்ய வேண்டும். ஆறு மாதம் கழித்து ஒட்டுக் கட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் பாதிப்புகள் இருக்காது. பழங்களில் வெடிப்பு ஏற்படும் போது கால்சியம் நைட்ரேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் கலந்து, பட்டாணி சைஸ் இருக்கும்போது தெளிக்க வேண்டும். கலர் மாறும் போது மற்றொரு முறை தெளிக்க வேண்டும். 15 நாள் கழித்து மேலும் ஒரு முறை தெளிக்க வேண்டும். 15 நாள் இடைவெளியில் "சல்பேட் ஆப் பொட்டாஷ்' 2 முறை தெளிக்கலாம். ஒரு கொடிக்கும் 50 கிராம் வீதம் தரையிலும் போடலாம். இவ்வாறு செய்தால் பழம் நல்ல கலரிலும் இனிப்பு தன்மை 18 முதல் 20 பிரிக்ஸ் அளவில் கிடைக்கும். ஒரு கொத்தில் 90 முதல் 110 பழங்கள் இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால் பிஞ்சு விடும்போது கத்தரியால் வெட்டி விட வேண்டும். ஒரு கொடியில் 40 முதல் 50 கொத்துக்கள் இருக்க வேண்டும். திராட்சை கொடிகள் மற்றும் பழங்களில் மழைநீர் படுவதால், வெடிப்பு ஏற்படுவதில்லை. நிலத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது வெடிப்பு ஏற்படும். அதாவது, மழைநீரில் அதிக அளவு இனிப்பு இருப்பதால், நிலத்தில் தேங்கும் தண்ணீரை வேர்கள் உறிஞ்சி பழத்திற்கு கொண்டுபோய் சேமித்து வைக்கும். அப்போது பிரஷர் தாங்காமல் வெடிப்பு ஏற்படும். எனவே, விவசாயிகள் மழை காலங்களில் கருப்பு நிற பாலிதீன் சீட்டுக்களை வாங்கி திராட்சை தோட்டங்களில் விரித்து விட்டால் தண்ணீர் நிலத்திற்குள் இறங்காது. பழங்களில் வெடிப்பு ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். மேலும் திராட்சை சாகுபடி தொடர்பான சந்தேகங்களை ஆராய்ச்சி நிலையத்தின் வேலைநேரங்களில் விவசாயிகள் நேரடியாகவும் வந்து கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment