Tuesday, October 27, 2015

கால்நடைகளுக்கு மாற்று தீவனம் அசோலா அதிகாரிகள் தகவல்


மதுரை, : கால்நடைகளுக்கு தேவையான தீவன பற்றாக்குறையை சமாளிக்க அசோலா செடியை மாற்று தீவனமாக பயன்படுத்தலாம் என கால்நடைதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் விவசாய மேச்சல் நிலங்களில் பரப்பளவு குறைந்து உள்ளது. இதனால் தீவன பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை சரி செய்ய கால்நடைகளுக்கு மாற்று தீவனமாக அசோலா செடியை பயன்படுத்தலாம். இதன் மூலம் உற்பத்தி திறனை அதிகரித்து தீவன தட்டுப்பாட்டை சரி செய்யலாம் என கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்,” அசோலா பெரணி வகையை சேர்ந்த மிதவை செடி. இது நீரின் மேற்பரப்பில் வளரும். இப் பயிரை கால்நடைகளுக்கு பச்சையாகவோ, உலர் நிலையிலோ தரலாம். அசோலாவில் 50 முதல் 60 சதவீதம் புரத சத்து, பீட்டா கரோட்டின் அமிலம் மற்றும் தாது உப்பு உள்ளது. இதனை கறவை மாடுகளுக்கு வழங்கினால் பாலின் கொழுப்பு சத்து 10 சதவீதம் அதிகாரிக்கும். அதே போல் கொழுப்பு அல்லாத திடப்பொருளின் அளவு 3 சதவீதம் அதிகரிக்கும். தவிர பாலின் உற்பத்தி 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும்.
 

கோழிகளுக்கு தீவனமாக வழங்கும் போது கோழிகள் விரைவில் வளரும். அசோலாவை நன்கு கழுவிய பின்பு கறவை மாடுகளுக்கு உணவாக அளிக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு முதன் முதலில் அசோலாவை பயன்படுத்தும் போது அடர் தீவனம் ஒரு பங்கும், அசோலா ஒரு பங்கு கலந்து தர வேண்டும். நன்கு பழகிய பின்னர் அசோலாவை தனியாக தரலாம்.
 
பசுந்தீவன பற்றாக்குறையை சமாளிக்க புரதசத்து மிக்க அசோலாவை உற்பத்தி செய்து நிரந்தர மாட்டு தீவனமாக பயன்படுத்தலாம்” என்றனர்.

No comments:

Post a Comment