Thursday, October 29, 2015

வேளாண் பல்கலைக்கழகத்தில் காணுயிர் புகைப்படக் கண்காட்சி தொடக்கம்


கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் வன உயிரினங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு, மாவட்ட வனத்துறை, ரோட்டரி சங்கம், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் சார்பில் 12-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சியை முதுமலை புலிகள் சரணாலய கள இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட வன அலுவலர் எம்.செந்தில்குமார் பேசுகையில், "காட்டு விலங்குகள், பறவைகளின் கண்காட்சிகள் நடத்தப்படுவதன் நோக்கம், அந்த விலங்குகளை அழிவில் இருந்து பாதுகாப்பதே ஆகும். வனப் பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் அங்குள்ள விலங்குகளைச் சீண்டுவது, துன்புறுத்துவது, அப்படி செய்வதை செல்லிடப்பேசியில் படமெடுப்பது என்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றம் என்பதையும், விலங்குகளிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதையும் மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்' என்றார்.
ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன் பேசுகையில், "மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி அரிய விலங்குகள் உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளில் ஒன்றாகும். நமக்கு பெருமை தேடித் தரும் இந்த மலையையும், அதில் வாழும் விலங்குகளையும் மாணவர்கள், இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் இயற்கையுடன் எவ்வாறு இணைந்து வாழ்ந்தனர் அவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதையும் இக்கண்காட்சி விளக்கும் வகையில் அமைந்துள்ளது' என்றார்.
விழாவுக்கு தலைமை வகித்த வேளாண் கல்லூரி முதன்மையர் முனைவர் .மகிமை ராஜா பேசுகையில், "இந்தக் கண்காட்சி புகைப்படக் கலைஞர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதுடன் மக்களிடையே பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உள்ளது. அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று சார்ந்து வாழ படைக்கப்பட்டவை. மனிதர்கள் அதை உணர்ந்து செயல்பட வேண்டும்' என்றார். நவம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்களின் சுமார் 1,500 புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

http://www.dinamani.com/edition_coimbatore/coimbatore/2015/10/29/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/article3103098.ece

No comments:

Post a Comment