Tuesday, October 27, 2015

வடகிழக்குப் பருவமழை இன்று தொடக்கம்: கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு



வட கிழக்குப் பருவமழை புதன்கிழமை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அதன் இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது: அண்மையில், இலங்கையை ஓட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. தற்போது அதே இடத்தில் நீடிக்கிறது. தற்போது, அதே இடத்தில் வலுப்பெறாமல் தாழ்வுப் பகுதியாகவே மட்டும் நிலைக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்துள்ளது. அதாவது, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, செங்குன்றத்தில் அதிகபட்சமாக 20 மி.மீ, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 10 மி.மீட்டர் மழையும் பதிவாகியது.
முன்னறிவிப்பு:
கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்யும். சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
மாநிலத்தின் அனேக இடங்களில் நாளை (புதன்கிழமை) மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதால், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார் எஸ்.ஆர்.ரமணன்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழகக் கடலோரத்தில் வடக்கிலிருந்து, வடமேற்கு நோக்கி மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


http://www.dinamani.com/latest_news/2015/10/28/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%C2%A0-/article3101629.ece

No comments:

Post a Comment