Thursday, October 29, 2015

தமிழ்நாட்டில் பருப்பு வியாபாரிகள் எவ்வளவு இருப்பு வைத்துக்கொள்ளலாம்? உணவுத்துறை அமைச்சர் தகவல்



சென்னை, 

தமிழ்நாட்டில் பருப்பு வியாபாரிகள் எவ்வளவு இருப்பு வைத்துக்கொள்ளலாம்? என்பது பற்றி உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசினார்.

பருப்பு வியாபாரிகளுடன் ஆலோசனை

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ரா.காமராஜ் தலைமையில், பருப்பு வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் 28-ந் தேதி (நேற்று) சேப்பாக்கம் எழிலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:-

பெரும்பான்மையாக பருப்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பருவமழை பொய்த்த காரணத்தால், சாகுபடி பரப்பளவும், உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், பருப்பு வகைகளின் விலை இந்தியா முழுவதும் உயர்ந்துள்ளது.

அரசு நடவடிக்கைகள்

தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு இவ்விலையேற்றத்தின் பாதிப்பு ஏற்படாதவண்ணம் குறைந்த விலையில் கிடைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

தமிழகம் முழுவதுமுள்ள 34 ஆயிரத்து 352 ரேஷன் கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ உளுந்தம் பருப்பு ஆகியவை ரூ.30 என்ற விலையிலும், பாமாயில் ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.25 என்ற விலையிலும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மானியச்சுமை

இதன்படி, ஒவ்வொரு மாதமும் 13 ஆயிரத்து 461 மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 7 ஆயிரம் மெட்ரிக் டன் உளுந்தம் பருப்பு, ஒரு கோடியே 50 லட்சம் பாக்கெட் பாமாயில் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டு, சராசரியாக 98 சதவீதம் நுகர்வு செய்யப்படுகிறது.

இப்பொருட்கள் வழங்கப்படும் சிறப்பு பொது வினியோக திட்டத்திற்கான மானியத்தை முந்தைய மத்திய அரசு 2012-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதியோடு நிறுத்திவிட்டபோதிலும், இதனால் ஏற்படும் மானியச்சுமை சுமார் ஆயிரத்து 400 கோடி ரூபாயை தமிழக அரசே ஏற்றுக்கொண்டு இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

நவம்பர் 1 முதல்...

முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் இத்திட்டங்களை பின்பற்றி ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.40-க்கும், அரியானாவில் ஒரு கிலோ ரூ.50-க்கும் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

1.11.2015
முதல் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் கூட்டுறவு மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பல்பொருள் விற்பனை அங்காடிகள் மூலம் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.110 என்ற விலையிலும், அரை கிலோ ரூ.55 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

உத்திகள்

அதன்படி, 91 அங்காடிகள் மூலம் விற்பனை செய்ய, அங்காடிகளுக்கு துவரம் பருப்பு நுகர்வு செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அளித்துவரும் பல்வேறு சலுகைகளின் பயனாக, தமிழ்நாட்டில் துவரை சாகுபடி செய்யும் நிலப்பரப்பு உயர்ந்துள்ளது. இதற்காக ஒரு இயக் கம் செயல்படுத்தப்படும்,

துவரை சாகுபடி அதிகரிக்க பல்வேறு உத்திகள் கடைப்பிடிக்கப்படும் என்றும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் பருப்பு தேவைக்கு தன்னிறைவு ஏற்படும் நிலை உருவாகும்.

பருப்பு இருப்பு எவ்வளவு?

தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருள்கள் பதுக்கப்படுவது மற்றும் கடத்தப்படுவது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பருப்பு மொத்த வணிகர்களுக்கு மாநகராட்சி பகுதிகளில் 2,500 குவிண்டால் என்றும், சில்லரை வணிகர்களுக்கு 62.5 குவிண்டால் என்ற அளவிலும் பருப்பு இருப்பு வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதர பகுதிகளில் முறையே 1,250 குவிண்டால் மற்றும் 50 குவிண்டால் என்ற அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அளவு அனைத்து வகை பருப்புகளையும் உள்ளடக்கிய மொத்த அளவாகும். 

பருப்பு வணிகர்கள், அனுமதிக்கப்பட்டுள்ள அளவில் மட்டும் பருப்பு இருப்பு வைத்து, விலை உயர்வின்றி, வினியோகம் செய்ய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றோர்

அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவதாக பருப்பு வணிகர்கள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் சிவ்தாஸ்மீனா, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சூ.கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் கா.பாலச்சந்திரன், உணவு பொருள் குற்ற புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனர் கே.ராதாகிருஷ்ணன் மற்றும் பருப்பு வணிகர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment