Tuesday, October 27, 2015

பட்டுக்கூடு உற்பத்தியில் அசத்தும் மதுரை விவசாயி



மதுரையில் பட்டுப்புழு வளர்ப்பு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளது. நெல், கரும்புக்கு புகழ்பெற்ற சோழவந்தானில் மாற்றுத்தொழிலாக மன்னாடிமங்களம் விவசாயி ஜி.முருகன், பட்டுப்புழு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். பாரம்பரியமாக நெல், கரும்பு, தென்னை, வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வந்த முருகனுக்கு, பட்டுப்புழு வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டது பலருக்கு ஆச்சரியம். 
முருகன் கூறியதாவது: நெல், கரும்பு, தென்னை, வாழைக்கு தண்ணீர் அதிகம் தேவை. சோழவந்தானில் தண்ணீருக்கு பஞ்சமில்லை. ஆனால் விவசாயப்பணிக்கு தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. காரணம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் அமலானதில் இருந்து விவசாயிகள் படும்பாடு சொல்லி மாளாது. இதன் காரணமாகவே மாற்றுத்தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயம் பலருக்கு ஏற்பட்டது. எனினும் பலர் தயங்கினர்.
நான், துணிச்சலுடன் களத்தில் இறங்கினேன். விளைவு கைமேல் பலன் கிடைத்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் இளம் புழு வளர்ப்பு மையம் உள்ளது. இங்கிருந்து "டபுள் ஹைபிரிடு' ரகத்தை சேர்ந்த பட்டுப்புழுக்கள் வாங்குகிறேன். மஞ்சள் நிற பட்டுக்கூடு, வெள்ளை நிற பட்டுக்கூடு என இரு வகை உண்டு. வெள்ளை கூடு ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தலைமுடி அளவு மட்டுமே புழுக்கள் இருக்கும். இறுதியாக பத்தாயிரம் மடங்கு வளர்ச்சி பெறும்.
பட்டுப்புழுக்களுக்கு முக்கிய உணவு "வி1' இனத்தை சேர்ந்த மல்பரி இலை. இச்செடியை நடவு செய்து 53 வது நாளில் இருந்து தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பலன் தரும். நெல் விவசாயத்தில் அதிகபட்சம் மூன்று போக விளைச்சல். பட்டுப்புழுக்கள் வளர்ப்பு மூலம் பட்டுக்கூடு ஆண்டுக்கு ஐந்து முறை கிடைக்கும். இது ஐந்து போக விளைச்சலுக்கு சமம். மதுரை சமயநல்லூரில் மத்திய பட்டு வாரியம் மூலம் மானியத்துடன் கூடிய வெள்ளை நிற பட்டுப்புழு வளர்ப்பில் இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன்.
சொந்த நிலத்தில் மூன்று ஏக்கரில் தரமான மல்பரி செடிகளை வளர்க்கிறேன். காலை, மாலை, இரவு என மூன்று வேளைகள் புழுக்களுக்கு இலை வைக்க வேண்டும். ஒரு கூட்டின் எடை 2 கிராம் வரை இருக்கும். 45 நாட்களுக்கு ஒரு முறை 250 கிலோ வரை பட்டுக்கூடு கிடைக்கும். 100 சதுர அடி பரப்பளவில் வளரும் புழுக்கள் படிப்படியாக 4 ஆயிரம் சதுர அடிக்கு பரவும். ஷெட் அமைக்கவும் மானியம் உண்டு. முறையாக பராமரித்தால் ஆண்டுக்கு பத்து முறை பட்டுக்கூடுகள் கிடைக்கும் என்றார். தொடர்புக்கு 94431 09451.


No comments:

Post a Comment