Friday, April 1, 2016

இயற்கை வேளாண் நிறுவனத்தில் உலக வங்கி ஆலோசகர் ஆய்வு

புதுகை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை உலக வங்கி ஆலோசகர் விகாஸ் சவுத்ரி ஆய்வு செய்தார். உலக வங்கி ஆலோசகர் விகாஸ் சவுத்ரி 1,028 சிறு, குறு விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட புதுகை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டு, சிறு குறு விவசாயிகளின் நலனுக்காக செயல்பட்டுவரும் கம்பெனியின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். மதிப்புக் கூட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் சிறுதானிய அரிசிகள், பாரம்பரிய அரிசிகள், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றை பார்வையிட்டு, சிறுதானிய அரவை இயந்திரங்களையும் பார்வையிட்டார். மேலும், நிறுவனத்தின் இயக்குநர்களுடன், நிறுவனம் செயல்படுகின்றவிதம், நிறுவனத்துக்கும் விவசாயிகளுக்குமான தொடர்பு, கடந்த வருட கொள்முதல், விற்பனை, அடைந்த லாபம், கம்பெனியின் எதிர்கால செயல்பாட்டு திட்டம் போன்றவற்றை கலந்துரையாடல் செய்து, நிறுவனத்தை வலுப்படுத்துவதற்காக செயல்படுத்த வேண்டிய வேலைகளான விற்பனையை விரிவுபடுத்துதல், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் அல்லாது தானியங்களாகவும் விற்பனை செய்தல், நிறுவனங்களுடனான தொடர்பை வலுப்படுத்தி விற்பனையை விரிவுபடுத்துதல் போன்ற ஆலோசனைகளை வழங்கி, கம்பெனியின் வணிகப் பெயர் மற்றும் சின்னம் (பிராண்டு மற்றும் லோகோ) ஆகியவற்றை வெளியிட்டு, அடுத்த வருட இறுதிக்குள் ரூ.1 கோடி வரை விற்பனை செய்ய வேண்டுகோள்விடுத்தார். 

ஒரு நிறுவனத்தின் அடிப்படை விஷயங்களான கொள்முதல், இருப்பு வைக்குமிடம், அரவை இயந்திரங்கள், விற்பனை ஆகியவை சராசரியாக ஒரே இடத்தில் செயல்படுவது மிகவும் பாராட்டுக்குரியது என்றார். இதில் தமிழ்நாடு வேளாண் வணிக இணை இயக்குநர் முகமது இக்பால், புதுகை வேளாண் இணை இயக்குநர் அண்ணாமலை, புதுகை வேளாண் வணிக துணை இயக்குநர் சிங்காரம், முன்னோடி விவசாயி தனபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, உற்பத்தியாளர் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் ஆதப்பன் வரவேற்றார். நிறுவனத்தின் செயல்பாடுகள், நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு குறித்து நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் அகிலா விளக்கினார். விஜயா நன்றி கூறினார்.

source : Dinakaran

No comments:

Post a Comment