கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில் முனைவோருக்கு மத்திய அரசின் மானியத் தொகை ரூ. 14 லட்சம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
இதுகுறித்து வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் தொழில்நுட்ப வணிக காப்பகம் செயல்படுகிறது. இதில் சுமார் 150 தொழில் முனைவோர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த மையத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழில் முனைவோர், தனியார் தொழில் குழும நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர், உணவு பதப்படுத்துதல், தென்னை, தென்னை நார் சார்ந்த பொருள்கள் தயாரிப்பு, அங்கக முறையில் காய்கறி, பழங்கள் உற்பத்தி, சேமிப்புக் கிடங்கு, கோழிக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில் மானியத் தொகை வழங்கப்படும். அதன்படி, 2015 -2016- ஆம் ஆண்டுக்கான மானியத் தொகை ரூ. 14 லட்சம், மையத்தின் 7 உறுப்பினர்களுக்கு கிடைத்துள்ளது. இந்தத் தொகையை பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி, தொழில் முனைவோருக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குநர் இரா.முருகேசன், உதவிப் பேராசியர் செந்தில்நாதன், வணிக மேலாளர் ஏ.ஞானசம்பந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.
Source : dinamani
No comments:
Post a Comment