Monday, October 19, 2015

புதுகை மாவட்டத்தில் நிலத்துக்கு பசுந்தாள் உரமிட்டால் மண் வளத்தை மேம்படுத்தலாம் வேளாண் துறை தகவல்

 
அறந்தாங்கி, :  புதுக்கோட்டை மாவட்டத்தில் பசுந்தாள் உரமிட்டால் நிலத்தில் மண் வளத்தை மேம்படுத்தலாம் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்துக்கு பசுந்தாள் உரமிட்டு மண்ணின் வளத்தை மேம்படுத்துமாறு வேளாண் உதவி இயக்குநர் தியாகராஜன் விவசாயிகளுக்கு வேண்டுகொள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பசுந்தாள் உயிர்களில் மிகவும் முக்கியமானவை சணப்பு, தக்கை பூண்டு மற்றும் கொழுஞ்சி ஆகியனவாகும். இவற்றில் சணப்பு, தக்கை பூண்டு ஆகிய பயிர்கள் எல்லா வகை நிலங்களுக்கும் ஏற்றவையாகும். இதில் தக்கைபூண்டு களர் உவர் நிலங்களில் நன்கு வளரும் தன்மையுடையது. பசுந்தாள் உரப் பயிர்களை 40 முதல் 60 நாட்கள் வளர்த்தால் போதுமானது. நீண்ட நாட்கள் வளர்ந்த பசுந்தாள் உரப்பயிரில் நார்த்தன்மை அதிகமாக மக்கும் தன்மை குறையும் என்தால் பசுந்தாள் உரப்பயிர்களை 35ல் இருந்து 45 நாட்கள் வரை அலலது பூக்கும் தருணத்திற்கு முன்பு மடக்கி உழுவது சாலச் சிறந்ததாகும். இவ்வாறு மடக்கி உழும்போது பசுந்தாள் உர பயிர்களில் உள்ள பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் வெளிக்கொண்டு வருகின்றன. இதனால் பயிர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கப்பெற்று பயிர்கள் 
செழித்து வளர்கின்றன.  மேலும், இந்த பசுந்தாள் உரப்பயிர்களை தென்னந்தோப்பில் பயிர் செய்து மடக்கி உழுவதால் மண்வளம் அதிகரிப்பதோடு ஒல்லிக்காய், தேங்காயில் ஒடு கீறுதல் போன்ற நுண்ணூட்ட பற்றாக்குறையினால் ஏற்படும் குறைபாடுகள் நிவர்த்தி அடைகின்றன. மேலும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு திறட்சியாகவும் வளரும் என்பதால் தென்னை பயிருக்கு பசுந்தாள் உரங்கள் மிகவும் உகந்தவை. பசுந்தாள் உரங்களை பயன்படுத்துவதால் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகரிக்கும். எனவே அவைகளில் இருந்து பலவிதமான அங்கக அமிலங்கள், வளர்ச்சி ஊக்கிகள் வெளியிடப்படுகிறது. மேலும் மண்ணின் இறுக்கத்தை குறைக்கிறது. இவை மண் போர்வை போல செயல்பட்டு நீர் ஆவியாவதை தடுக்கிறது. மண்ணில் அடியில் விளைவிக்கும் உப்பு மேல் மட்டத்திற்கு வரவிடாமல் தடுக்கிறது. எனவே விவசாயிகள் பசுந்தாள் உரங்களை வாங்கி பயன்பெறலாம். மேலும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பசுந்தாள் உர விதைகளை 50 சதவிகித மானியத்தில் வாங்கி பயனடையலாம் என்றார்.



No comments:

Post a Comment