Friday, October 23, 2015

சின்ன சின்ன செய்திகள்





கரும்பு சாகுபடி - குருத்துப்புழு, தண்டுப்புழு- கட்டுப்பாடு : இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் எளிதாக அழிக்க முடியும் என்று தெரிவிக்கிறார் அனுபவ விவசாயி ஆர்.மோகன்குமார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக தேனி அருகே அன்னஞ்சியில் கரும்பு விவசாயத்தை மட்டுமே செய்து அதிக லாபம் ஈட்டி சாதனை படைத்து வருகிறார். ""கார்சீரா'' என்னும் பூச்சிகள் மூலம் டிரைகோகிரம்மா ஜப்பானிகா என்ற முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து வெளிவரும் பூச்சியிலிருந்து ஒட்டுண்ணி என்று அழைக்கப்படும் நுண்ணிய முட்டை கிடைக்கிறது. இந்த முட்டை ஒரு சி.சி. என்றழைக்கப்படும் ஏழுக்கு 10 என்ற சதுர சென்டி மீட்டர் கொண்ட ஓர் அட்டையில் 15 ஆயிரம் நுண்ணிய முட்டைகளை ஒட்டி கரும்பு நடவு செய்த 4 மாதங்களிலிருந்து 6 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை ஒட்ட வேண்டும். மூன்று சி.சி. அட்டைகளை கரும்பு சோகைக்கு இடையில் கட்டி விட்டால் அந்த முட்டைகள் ஒட்டுண்ணிப் பூச்சிகளை உருவாக்கிப் புழுக்களைத் தின்று எஞ்சிய புழுக்களின் உடலில் தன்னுடைய முட்டைகளை ஒட்டி விட்டுச் சென்று விடும். இதனால் புழுக்கள் முற்றிலும் அழிந்து விடும்.
இந்த ஒட்டுண்ணிகளை விவசாயியே உற்பத்தி செய்து, ஒரு அட்டையில் ஒட்டப்படும் ஒரு சி.சி. முட்டையின் விலை வெறும் ரூ.35 மட்டுமே என்று கூறுகிறார். ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடிக்கு 10 சி.சி. மட்டும் பயன்படுத்தினாலே போதும்.
பசுமைக்கூடம் தொழில்நுட்பம் : பசுமைக்குடில் என்று ஒளி ஊடுருவக்கூடிய கண்ணாடி () பாலிதீன் கூரையினால் போர்த்தப்பட்ட அமைப்பாகும். இதில் தேவைக்கு ஏற்றவாறு தட்பவெப்ப நிலைகளை கட்டுப்படுத்தலாம். தாவரங்கள் இரவில் வெளியிடுகிற கரியமிலவாயு உட்புறத்திலேயே தங்கி விடுவதால் பகல் நேரத்தில் தாவரத்திற்கு ஒளிச்சேர்க்கைக்கு அதிகப்படியான கரியமிலவாயு கிடைக்கிறது. எனவே 5 முதல் 10 மடங்கு அதிக அளவில் ஒளிச்சேர்க்கை நடைபெற்று விளைச்சல் அதிகமாகவும், தரமானதாகவும் அமைகிறது. மற்றும் சாகுபடி செய்யப்படும் மண் பரப்பில் இருந்து ஆவியாகும் நீரும் உட்புறத்திலேயே தங்கி விடுவதால் சொட்டுநீர் உரப்பாசனத்தில் சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த அளவு நீர் மற்றும் உரங்கள் மட்டுமே சாகுபடிக்கு தேவைப்படுகிறது.
பசுமைக்கூடத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கறிப் பயிர்கள், தக்காளி, குடைமிளகாய், வெள்ளரி, பீன்ஸ் மற்றும் கீரை வகைகள்.

சோளரவைப் பொங்கல் : தேவையான பொருட்கள் - சோள ரவை - 1 கப், பாசிப்பருப்பு- 1/4 கப், இஞ்சி - சிறிய துண்டு, மிளகு - 1/4 தேக்கரண்டி, சீரகம்-1/4 தேக்கரண்டி, நெய் - 2 தேக்கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயம்- 1 சிட்டிகை, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு.
செய்முறை : பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த சோள ரவை பாசிப்பருப்பு, உப்பு, 3 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். வெந்த கலவையை நன்கு கிளறவும். வாணலியில் நெய் சூடாக்கி மிளகு, சீரகம், பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து, பொங்கலில் கொட்டி கிளறி பரிமாறவும். சுவை மிகுந்த சோள ரவைப் பொங்கல் தயார். தகவல் : கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார், சென்னை-600 041.

நிழவகைக் குடில் : இவ்வகைக்குடில் காய்கறி சாகுபடி செய்வதற்கும், நாற்றங்கால் உற்பத்தி செய்வதற்கும் மிகவும் இலாபகரமானவை. நிழல்வகைக் குடில் கூரையாக 25 முதல் 75 விழுக்காடு நிழல் தரக்கூடிய நிழல்வலை கூரையாகப் போர்த்தப்படுகிறது. மேலும் பக்கச் சுவர்களுக்கு பதிலாக பூச்சிகள் உட்புகாத நைலான் வலை கொண்டு அமைக்கப்படுகிறது. பசுமைக்குடில் போன்று தொடர் கூடாரமாக இல்லாமல் பரப்பில் பெரியதாகவும், ஒரே வலைக் குடிலாகவும் எளிதாக அமைக்க முடியும்.
மேலும் தரமான கடினமான மரம், கல் மற்றும் கான்கிரீட் தூண்கள், அலுமினிய குழாய்கள், இரும்புக் குழாய்கள் கொண்டு நிழல்வலைக் குடிலை அமைக்கலாம். சமவெளிப்பிரதேசங்களில் காய்கறி சாகுபடிக்கு பச்சை நிற அல்லது கறுப்பு நிற 35 முதல் 50 விழுக்காடு நிழல் தரக்கூடிய வலை விரிப்புகளை பயன்படுத்தி காய்கறி உற்பத்தி செய்யலாம். இதனால் தக்காளி, குடைமிளகாய், பூக்கோசு, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றி லாபகரமாக சாகுபடி செய்வதோடு நிழல்வலைக்குடில் மிகவும் ஏற்றது. நிழல்வலைக்குடிலை அமைக்கும் செலவு குறைவு. வீரிய ஒட்டு காய்கறி நாற்றங்கால், உற்பத்தி விலைமதிப்பு மிக்க காய்கறிகளின் உற்பத்தி செய்யலாம். 
தகவல் : பேராசிரியர் மற்றும் தகவல் காய்கறி பயிர்கள் துறை, தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், .வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 603. தொலைபேசி: 0422 - 661 1283.
-
 டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.



No comments:

Post a Comment