Friday, October 16, 2015

வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்: கணிப்பை வெளியிட்டது வேளாண் பல்கலை



கோவை:இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்' என்பது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை, கால நிலை ஆய்வு மையம் கணிப்பை வெளியிட்டுள்ளது.
வடகிழக்குப்பருவமழை காலம், அக்டோபரில் துவங்கி, டிசம்பர் வரை நீடிக்கும். இந்தாண்டு, இக்காலகட்டத்தில் மழைப்பொழிவு எப்படியிருக்கும் என்பது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை, காலநிலை ஆய்வுமையம் ஆய்வு மேற்கொண்டது.
பசிபிக் பெருங்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள, கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை, தென்மண்டல காற்றழுத்தக்குறியீடு அடிப்படையில், கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தமிழகத்தில், வடகிழக்குப்பருவமழை, 80 சதவீதம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு, திருப்பூர் சேலம், தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், கடலுார், நாகப்பட்டினம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, துாத்துக்குடி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், வேலுார், திருவண்ணாமலை, சென்னை, கன்னியாகுமரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், சராசரி மழை பெய்யும். கோவை, கரூர், திருவாரூர், திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சராசரிக்கும் அதிகப்படியான மழை பெய்யும். 'இது பற்றிய மேலும் விவரங்களை, வேளாண் பல்கலை காலநிலை ஆய்வு மையத்தில் கேட்டறியலாம்' என்று, ஆய்வு மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment