Monday, October 19, 2015

மண்வளத்தை பாதுகாக்க பழங்குடியின மக்கள் பாரம்பரிய விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்: ஆராய்ச்சி மைய இயக்குனர் பேச்சு

ஊட்டி
மண்வளத்தை பாதுகாக்க பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பயிற்சி முகாமில் பழங்குடியின ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சுப்பிரமணியம் கூறினார்.
பயிற்சி முகாம் ஊட்டியில் மத்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் சார்பில் நீலகிரியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தேயிலை மற்றும் காய்கறி சாகுபடியில் மண் மற்றும் நீர் வளத்தை பாதுகாப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மையத்தில் பழங்குடியின மக்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு மைய தலைவர் பால் சிங் கோலா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:–
பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. எனவே இதுபோன்ற நலத்திட்டங்களை செயல்படுத்த பழங்குடியின மக்கள் தாங்களாகவே முன்வந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் இந்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தங்களின் ஆலோசனைகளையும் கூறலாம். இதன் மூலம் நலத்திட்ட பணிகளை நல்ல முறையில் செயல்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
பாரம்பரிய பயிர்கள் தொடர்ந்து பழங்குடியின ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சுப்பிரமணியம் பேசும் போது கூறியதாவது:–
பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய விவசாயத்தை மேற்கொண்டாலே மண் வளத்தை பாதுகாக்க முடியும். தற்போது கால மாற்றம் காரணமாக பழங்குடியின மக்களின் பாரம்பரிய பயிர்கள் அழியும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதுபோன்ற பயிர்களை மீண்டும் பழங்குடியின மக்கள் பயிரிட வேண்டும்.
இங்கு அளிக்கப்படும் பயிற்சி மூலம் கற்றுக்கொண்ட யுக்திகளை பிற விவசாயிகளுக்கு நீங்கள் எடுத்து கூற வேண்டும். மத்திய பழங்குடியின அமைச்சகம் தற்போது போதுமான நிதி ஒதுக்கி வருகிறது. இதனை பழங்குடியின மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Daily thanthi

No comments:

Post a Comment