தொட்டியம் வாழை உற்பத்தியாளர் குழுவால் தொட்டியத்தில் அமைக்கப்பட்டுள்ள வாழைப்பழ கதிரொளி உலரகத்தை வேளாண் வணிக ஆணையர் சம்புகல்லோலிகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் உலக வங்கி ஆலோசகர் முகமது இக்பால், இணை இயக்குனர் (வேளாண்மை) சவுந்திரராஜன், நீர்வள நிலவள திட்ட ஆலோசகர் ஆகியோர் வந்திருந்தனர். மேலும் அவர்கள் தொட்டியம் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி போன்ற பழுத்த பழங்களை தரமான தேனில் நனைத்து கதிரொளி மூலம் உலரவைக்கும் தொழில்நுட்ப முறைகளை பார்வையிட்டு மேம்பாட்டு செயல்முறை ஆலோசனை வழங்கினர். இந்த உலரகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட உலர் கீரைகள், உலர் தக்காளி, உலர் பருப்பு வகைகள், வாழைப்பழ சாக்லெட் முதலிய மதிப்பு கூட்டப்பட்டபொருட்களையும் பார்வையிட்டனர். தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொதுச்செயலாளர் அஜித்தன், பொருளாளர் சுப்பிரமணியன், திருச்சி வாழை உற்பத்தியாளர் சங்க தலைவர் சுகுமார் மற்றும் வாழை சாகுபடி விவசாயிகளும் உடன் இருந்தனர். அதன்பின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் என்.சர்புதீன், முசிறி வேளாண் வணிகத் திட்ட அலுவலர் புஷ்பா சிவக்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கர், கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
source : Dailythanthi
No comments:
Post a Comment